Friday, November 18, 2016

ஒரு சந்திப்பில் அவளும் நானும்....


இதற்கு முன்பு சில சமயங்களில் அவளும்  நானும் சம்பிரதாய புன்னகையை உதிர்த்திருக்கிறோம் நாங்கள் சந்தித்த அந்த எதேச்சை தருணங்களில்... எதோ பிடித்திருக்கும் அந்த புன்னகையும், புன்னகையின் முகமும் அப்பொழுதெல்லாம்... வாழ்க்கையின் சில நிகழ்வுகள் சாமானிய மனிதன் எதிர்பார்த்திராத தருணத்தை பரிசாய் கொடுத்து விடும். அப்படியொரு தருணத்தில் தான் சந்தித்தேன் அவளை...

"யாரடி உரைத்தது, ஆண் என்பவன் அசைக்கமுடியாதவனென்று.......,
உன் ஒற்றை பூவே அசைத்ததடி என்னைக்கட்டிப்பிடித்து மொத்தமாய்.....,
உடை களையா நடையில் கலைந்தே போனேனடி மொத்தமும் களைந்து....,
மடிய அடம்பிடிக்கும் உன் புடவையில் மடிந்தே போனேனடி.....
என்ன பதில் சொல்ல, மிச்சம் வைக்காமல் கொன்ற உன் புன்னகைக்கு....
விழித்தேன்,மௌனித்தேன், வெட்கித்தேனடி"

அவளோட நடக்க ஆரம்பித்தேன், என் பக்கத்துவீட்டு ரெண்டு வயது ஆனந்தி நடக்கையில் அவளுக்கு பிடித்த நாய்க்குட்டியை தன் இடுப்பில் அரைகுறையாய் தூக்கிக்கொண்டு போவாள்,நாய்க்குட்டிக்கு வலித்தால் என்ன, அசௌகரியமாய் இருந்தாலென்ன என்றவளாய்..எங்கெல்லாமோ கூட்டிக்கொண்டே போவாள் அவ்வப்பொழுது "ஏய் கத்தாம இரு" என்று கத்தியபடி....
என்ன செய்ய, நானும் அப்படித்தான் அவளோடு அப்பொழுது..... பிடித்திருந்தது அவளோடு மௌனமாய் நடந்தது, அன்பு,நட்பு, காதல், காமம், ஈர்ப்பு, பிரிவு, ஏக்கம், முதல் காதல், கடைசி காதல், சந்தோசம், ஏமாற்றம் இப்படி எத்தனையோ உறவுகளை பொருத்திக்கொண்டு மௌனமாய் நடந்தேன் ஆதலால்....
பிரிவிற்கான இடங்களில் பிரிந்தாகவேண்டும், வெவ்வேறு இருக்கைகள், வெவ்வேறு வேலை உலகங்கள்,சிறிது நேரம் மட்டுமே அவளிடமிருந்து என்னை பிரித்துவைக்க முடிந்திருந்தது.. அவள் இருக்கை நோக்கிய சில நேரங்களில் இதயம் கனக்க ஆரம்பித்தது,அவளில்லாமல்... "சாப்பிட போகலாம்" என்றொரு அவளின் அழைப்பை இறுக்கியணைத்துக்கொண்டு நடக்கிறேன்,சட்டென்று மௌனத்தை உடைத்து சில கேள்விகள், பதில்களை எதிர்பார்க்காமல்....மீண்டும் இணைந்தோம் இடைவேளையில்இரண்டு இருக்கைகளுக்கு இருமருங்கிலும்...

"நீ வந்து அமர, பிடித்து வைத்திருந்த இருக்கை கடைசிவரை ஏமாந்தே நின்றது என்னைப்போலவே....
நொடிக்கொருமுறை விழுங்கினேன் உன்னை, உணவோடு சேர்த்து.... 
உண்ட உணவு ஜீரணித்துவிட்டதடி, ஆனால் பக்கத்து இருக்கையோடு உன் உரையாடல் மட்டும்....                                                                         
உணவை முடித்து நடக்கிறேன் பேசமுடியாமல் விட்டவைகளை பொறுக்கி பையில் போட்டுக்கொண்டு..
கடைசி வரை திறக்கவில்லை என் உதடும்,பையும்."

"வேலை முடித்துவிட்டு வா, பார்ப்போம்" என்ற கணத்தில் அவள் கண்கள் பேசிய கவிதைகளை, புரண்டும், விழுந்தும், அமர்ந்தும், படுத்தும், நின்றும், பொருத்திப்பார்க்கிறேன், ஒன்றும் புரியாதவனாய் கடைசியில் அவளிடமே நின்றேன்..பேச ஆரம்பிக்கிறாள்.. அவள் விழிகள் பேசியதை நிச்சயம் அவள் பேசிவிடவில்லை...பேசினாள் என்னோடு அவள் கவிதையாய்...அவளை கவிதையாக்கினேன்,வாசித்தேன்.திகட்டவில்லை வாசித்தேன்..சின்ன புன்னகை, என்னை அவளோடு, அவளாக்கியது.. புன்னகையா, ஈர்ப்போ, அழகோ,வார்த்தையோ எதோ ஒன்று இறுக்கப்பிடித்திருந்தது என்னை அவளோடு சில மணி நேரங்கள்..நேரம் தொலைந்தது, களைந்தோம்.. நடந்தோம் சாலையோர பேருந்து நிறுத்தத்திற்கு,.

"என்ன பெயர் வைக்க உனக்கும் எனக்குமான இந்த நிலா நடைக்கு.....             
எதுவாக இருப்பினும் இப்போதைக்கு தொலைந்து போகிஇருக்கிறேன்,.              
மீண்டும் கண்டெடுக்க படும்பொழுது யோசித்துக்கொள்கிறேனடி.. 
இப்போதைக்கு உன் பெயரையே வைத்துக்கொள்கிறேனடி....
உன் முத்தம் பெறமுடியாதென்று தெரியும்,ஆகையால் உன் முகம்பார்த்தே நடக்கிறேனடி...

அவளுக்கும் எனக்குமான பாதையும்,சந்திப்பும் முடியப்பெற பயணித்தோம் இரு பாதைகளில்.. பேருந்தில் அமர்கிறேன் தனியாய்..பல நூறு சத்தங்களுக்கிடையில் அவள் பேசியவை தனியாய் எதோ செய்ய, என்ன நடக்கிறது என்னுள் என்று நிதானமாய் பொருத்திப்பார்க்கிறேன் அவளை என்னுள்..புரியாமல் தவிக்கிறேன்..எதோ ஒரு உறவில் என்னுள் மிகச்சரியாக பொருந்துகிறாள்...என்னுள் புதைத்துவைத்து ஓடிச்சென்று ஒரு நிலா வெளிச்சத்தில், யாருமற்ற ஒரு புல் தரையில் சறுக்கி முட்டியிற்று ஓவென்று கத்தி மகிழ்கிறேன்..இதுவரை என்னுள் இருக்கும் அந்த மௌனத்தை உடைத்தது அவள் மட்டுமே...
ஏதோ சிரிக்கிறேன், ஏதோ பேசுகிறேன் எனக்குள்.... அத்தனை அழகாய் இருக்கிறது இந்த அனுபவம் என்னில்.... ச்சே இப்படி பேசி இருக்கக்கூடாது, இப்படி  பேசி இருக்க வேண்டும்.. ச்சே இப்படி உடல் மொழிகளை செய்து இருக்க கூடாது, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று எதற்காக இத்தனை ஒத்திகைகள் என்னுள்.. முடிந்த கதைக்கு எதற்கு இத்தனை விளம்பரம், இத்தனை சீர்மை....தேவையில்லை என்கிறது அறிவு, தேவை என்கிறது இதயம்.... இரண்டும் என்னிடமிருந்துதான் பிறக்கிறதென்றாலும் ,ஏதோ ஒன்றில்மட்டும் லட்சம் மலர்களை ஒன்றாய் பிடித்து நுகர்ந்த ஆனந்தம், உடலின் ஒவ்வொரு நரம்பில் பாயும் சிலிர்ப்பு... அத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் அவளோடு இருப்பதாய் உணர்கிறேன் தனியாய்..



      "மிக அருகில் நீ, உன் உதடுகளும் உன் கண்களும் பேசும் 
      வார்த்தைகள்..

      திணறுகிறேன், புரியாமல் விழிக்கிறேன்,என்ன 

      பேசுகின்றன...

      ஈர்ப்பும், நட்பும், காதலும், காமமும் எங்கே பிறக்கிறது?,

      உடலிலா?...மொழியிலா?...
 
      என்னை முழுவதுமாய் உன் கண்களும், உதடுகளும் தின்பதற்குள்
      விழித்துக்கொள்ள முயற்சிக்கிறேன் கனவு என்னும் 

      உள்மனதின் சிறையிலிருந்து...

      பிறகென்ன, ஏதோ ஒன்று மிச்சம் வைக்காமல் 

      கொன்றுவிடுவதற்குள் நான் தப்பித்துக்கொள்ள வேண்டுமல்லவா.   

      தயவு செய்து உன் விழிகளை மூடிக்கொள், நான் விழிக்க வேண்டும் 
      இப்போதே இங்கிருந்து...

எனக்கான இடம் வந்ததும், நிர்பந்தத்தில் வலுக்கட்டாயமாய் இறக்கப்படுகிறேன் எனது கனவுகள் கலையவிடப்பட்டு பேருந்திலிருந்து... எத்தனை வேற்றுமைகள் எனக்கான உலகத்திற்கும், யதார்த்த உலகத்திற்கும்.. ஓடிக்கொண்டிருக்கிறார்கள், கத்திக்கொண்டிருக்கிறார்கள், வெறும் இயந்திரத்தனத்தை ஒட்டிக்கொண்டே திரிகிறார்கள்...புன்னகையை தொலைத்ததே தெரியாமல் வேறெதையோ தேடுகிறார்கள்...நிதானமாய் நின்றோம் நானும் அவளும்,மௌனமாய் பேசினோம், யாதார்த்ததை ரசித்தோம், ஒவ்வொரு பார்வையிலும் சிரித்தோம்..மெதுவாய் நடந்தேன் தனிமையில் அவளோடு உறவாடிக்கொண்டே...

"இலக்கணம் உடைத்து உனக்கும் எனக்குமான உறவை என்னுள் செதுக்கிக்கொண்டு....  
யாருமில்லா தனிமையில் அவ்வப்பொழுது படித்து மூடிவைத்துக்கொள்கிறேன் பத்திரமாய்... 
என் உலகம், என் தனிமை, என் கனவு, யாரும் எட்டிப்பார்க்கக்கூட விட்டதில்லை...  

ஆதலால் பத்திரமாய் நீ இருக்கிறாய்...          
 முடியாதடி நீ வந்து கேட்டாலும், உன்னுள் நான் யாரென்று???...

வயிற்றை நிரப்பிக்கொண்டதும், கண்கள் மூடி தூங்கவேண்டும் எனும் மாத்திரத்திலே தூக்கம் இருக்க பற்றிக்கொள்ளும் வரம் கிடைத்ததை நினைத்து எத்தனையோ நாட்கள் கர்வம் கொண்டிருக்கிறேன். அத்தனையும் இன்றுடைந்தது. இது எனக்கான நாளில்லையோ என்றெல்லாம் நினைக்கத்தோணுகிறது. உருண்டும்,புரண்டும் நெளிந்தும் முயற்சித்த பின்னும் தோல்வியே, யாரோ என்னை திருடியிருக்கிறார்கள்..அவளைத்தவிர வேறு யாராய் இருக்கமுடியும்!!.
 
     என்னடி செய்யப்போகிறாய்!!!..

     கண்களை மூடி உன் எதிரே நிற்கும் என்னை....

     எப்படியும் என் அருகில் வரப்போவதில்லை நீ.....

     பிறகெப்படி திருடினாய் முழுவதுமாய் என்னை!!!!!!!!!.....

     கண்களை திறக்க சொல்கிறாய், சரி என்கிறேன்.....

     உன் புருவத்தை சுருக்கி புன்னகைக்கிறாய்.....

     என்ன செய்கிறாய்?..புரியவில்லை என்ற என் கேள்விக்கு
     பதிலளிக்காமல், சாதாரணமாய் இருக்கிறாய்..

     மூச்சு முட்ட, வியர்த்துக்கொட்ட நிற்கும் என்னை நோக்கி,
     புருவம் உயர்த்தி, என்ன என்பதுபோல் கண்களால்
     கேட்கிறாய்......

     நீயும் நானும் எந்த புள்ளியில் நிற்கிறோமென்றே

     தெரியவில்லை  இன்னும்,

     அதற்குள் எப்படி பதிலளிக்க?!!!!!..

     ஆகையால் நிற்கிறேன் மௌனமாய்......

     கெஞ்சுவதுபோல் நிற்கிறேன் என்னைக்கொடுத்து விடு,

     இல்லையேல் தூக்கத்தையாவது இப்போதைக்கு என்று.......

     முடியாது என்பதுபோல் சிரிக்கிறாய்....

     செல்ல கோபத்தில் மீண்டும் கண்களைமூடுகிறேன்,

     திறந்துவிடுகிறாய் மீண்டும்.....

     உனக்காய் அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன்

     என்கிறாய்...

     இதயம் கனக்க,அத்தனை சந்தோசத்தை இருக்க

     அழுத்திபிடித்திக்கொண்டு,

     யதார்த்தமாய் கேட்கிறேன், எதற்காக வந்தாய் என்று........

     கோபப்படுகிறாய், மெதுவாய் தலைகுனிகிறாய்..

     வெடித்து அழுகிறாய்.......

     துடித்துப்போனேன்...    

மொத்தமாய் நான் மாறியிருந்தேன்., எங்கு தேட?!!!... இந்த நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சுழன்றுகொண்டிருக்கும் அறைக்காற்றாடியோடு சேர்ந்தா?!!... நிச்சயம் வாய்ப்பில்லை.. இன்னுமொருமுறை அவளைக்காண்டால், கிடைத்துவிடுவேனா நான், நானாக அவளிடமிருந்து முழுவதுமாய்... ஒருமுறை பாதிப்பே, அகலாமல் அல்லவா நிற்கிறேன்.இன்னுமொருமுறையா...
     "உன்னிடமிருந்து என்னை மீட்டுவிட்டாலும் சரி,... 
     நிரந்தரமாய் உன்னில் தொலைத்தாலும் சரி,.... 
     இதோ புறப்படுகிறேன் மீண்டும் உன்னை நோக்கி".












0 comments:

Post a Comment