Saturday, February 13, 2016

அப்பா - கண்ணன் (1964-2015)

இப்படி ஒரு பதிவை, அதுவும் இவ்வளவு சீக்கிரம், தகப்பனை இழந்த மகனாக எழுதுவேன் என்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

ஆறுமுகம் என்பது உனது பெயர். எப்பொழுதிலிருந்து,எப்படி கண்ணன் என்று உன்னை அழைக்க ஆரம்பித்தார்களோ, அந்த நொடிகளிலிருந்து அப்படியே வாழ்ந்து இருக்கிறாய்.எவ்வளவு பெரிய மனிதானாய் இருந்தாலும் சரி பணத்திலும் பலத்திலும், தவறு செய்யும் பொழுது தட்டி கேட்டு இருக்கிறாய். கண்ணன் எவனக்கும் பயப்படமாட்டேன் என்று நீ நிற்கும் பொழுது என் அப்பன் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறேன்...

உன்னுடன் பயணம் செய்த இந்த முப்பது வருடங்களில் அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணமும், பொறாமை குணமும் ஒரு தருணத்தில் கூட நான் கண்டதில்லை. கடவுளின் மேல் சத்தியமாய் நான் ஒருமுறை கூட கண்டதில்லை.எண்ணத்தில் நீ எப்பொழுதும் கண்ணனே...

கிட்டத்தட்ட நம் கிராமத்தை சுற்றியுள்ள குறைந்தது 30 கிராமத்து மனிதர்களுக்கும் நீ யாரென்றும் எதற்கும் பயப்பட மாட்டாய் என்று நன்றாகத்தெரியும் . கடைக்கோடி மனிதனுக்கு ஒன்று என்றால் கூட நீ ஓடி இருக்கிறாய், உன்னால் வாழ்ந்தவர்கள் நிச்சயம் பல ஆயிரங்களை தாண்டி இருக்கும். என்னை பொறுத்தவரை உன்னிடம் நான் கண்ட ஒரே குறை நீ மதுவுக்கு அடிமையாய் சில காலம் கடந்தாய். அப்படி இருந்தும் உனது மகன்களை சொக்கதங்ககளாய் வளர்த்தாய். வளர்ப்பு என்றால் அப்படி ஒரு வளர்ப்பு, உன்னிடம் அடிவாங்காத நாட்கள் என்றால் அது இந்த கடைசி ஐந்து வருடங்களாய் தான் இருக்கும்.உன்னை பயத்துடன் பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். ஒன்று இரண்டு என விரல் விட்டு என்னும் எண்ணிக்கை கொண்ட இரு சக்கர வாகனங்கள் இருந்த காலகட்டத்தில் இருந்தே இருசக்கர வாகனம் வைத்து இருந்தாய். உனது அதிவேக சத்தத்தை வைத்தே ஊர் மக்கள் கணித்து விடுவார்கள் கண்ணன் வருகிறான் என்று.

பருந்தை கண்டு அஞ்சும் பாம்புகுட்டிகளாய் பதறியடித்து பதுங்கிக்கொண்டு இருப்போம் உன் வாகன சத்தத்தை கேட்கும்பொழுது. வந்து மெதுவாய் அமர்ந்து மீசை முறுக்கி சத்தமிடுவாய் சாப்பிடீங்களாடா? என்று.வாய் பேச பயந்து தலைமட்டுமே ஆட்டுவோம் நாங்கள்.அடுத்த கேள்வி அதிரச்செய்யும், "படிச்சீங்களாடா"?,மணி 10 வரைக்கும் படிக்கணும், படிக்கிற சத்தம் என் காதுக்கு கேட்கணும், போயி படி என்று சொல்லும் பொழுது வியர்த்தே இருக்கும் எங்களுக்கு.

இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது மட்டுமின்றி நீ எடுத்துக்கொண்ட அத்தனை செயல்களிலும் வேகம் தான்.வேகம் வேகம் வேகம்..கிட்டத்தட்ட ஒரு 20 பெரிய விபத்துகளில் சிக்கி இருப்பாய், பல பெரிய காயங்களுடன் பிழைத்துக்கொள்வாய்.ஊரார் நீ செய்த புண்ணியம் காப்பாற்றிக்கொண்டதாய் கூறுவார்கள். அப்படி தான் ஜூன்-7-2015 அழைப்பு வந்தது விபத்தில் நீங்கள் சிக்கிகொண்டதாய், பதறியடித்து என்னுள் சமாதானம் செய்து முடிப்பதற்குள், அடுத்த அழைப்பு, "விஜி அப்பா இறந்துட்டார்"

கதறி கதறி அழுதேனப்பா,உடைந்தே போயிவிட்டேனப்பா.தந்தை இழப்பு என்ன என்பதை உணர்ந்தேனப்பா.தந்தை இழந்த மகன்களின் ஒட்டு மொத்த வலியை ஒரே நொடியினில் உணர்ந்தேன். இதுவரை உடல் வலியை உணர்ந்து இருக்கிறேன், உள்ள வலியை உணர்ந்து இருக்கிறேன், முதல் முறையாய் உயிரின் வலியை உணர்ந்தேன், கத்தி அழுதேன், கண்ணீர் துடைக்க நீ இல்லை. பத்தாயீரம் ரூபாயை தொலைத்துவிட்டு அழுதுகொண்டே அலைப்பேசியில் உன்னை அழைத்தேன், ஒரே வார்த்தையில் கம்பீரமாய் கூறினாய் "காசு என்னடா சீம காசு, நீ அழாம கண்ண துடைச்சுக்கிட்டு உடனே ஊருக்கு கிளம்பி வா, உன் அப்பன் நான் இருக்கிறேன்" என்று. இப்பொழுது உன் மகன் நீ இன்றி கதறி கதறி அழுகிறேன், "நான் பாத்துகிறேன் அழாத குமாரு" என்று கண்ணீர் துடைக்க நீங்கள் இல்லையே

என்னுள் இருக்கும் ஒரு துளி வீரத்துக்கும் நீயே பொறுப்பு.உன் இழப்பு தைரியமாய் இருக்கவிடாமல் என்னை உடைந்து விழவைத்துவிட்டது. உன் வேகம் தான் எனக்கு பிடிக்கும், அதே வேகத்தில் பேருந்தில் மோதிய அடுத்த கணமே உயிரிழந்து விட்டாய்.அந்த கடைசி நொடியிலும் கூட எங்களை நினைத்து இருப்பாய் தானே அப்பா??.. 'பைக்கு உனக்கு வேண்டாம் குமாரு, உனக்கு காயம் ஆகிடும், கார் வாங்கிக்க,காசு நான் தறேன்' என்று படிச்சு படிச்சு என்னிடம் கூறினீர்கள். எப்படியப்பா நான் மட்டும் தாங்கிக்கொள்வேன் நீங்கள் காயம் பட்டு துடி துடித்து இறந்ததை?..  

உன்னை உயிரற்று மருத்துவமனையில் பார்த்த நிமிடத்திலிருந்து உயிரற்றல்லவா கிடக்கிறேன். எதைச்சொன்னாலும் "நான் பார்த்துகொள்கிறேன், உனக்கெதுக்கு கவலை குமாரு, உன் அப்பன் நான் இருக்கும்பொழுது எதுக்கும் கவலைப்படாத" என்பாய். இப்படி தகப்பனை இழந்த மகனாக்கி விட்டாய். உன் உடலை காண கதறி அழுத அவ்வளவு கூட்டத்தில் நான் துலைந்தே போனேன் உனைத்தேடி தேடி.இன்று முதல் உன் முகம் காண முடியாது என்று நினைக்கும் நொடிகளில் எல்லாம் நெஞ்சு கனக்கிறது தாங்க முடியாமல்.

இன்று உன் பிரேத பரிசோதனை சான்றிதல் வாங்க கூட தெரியாமலும், முடியாமலும் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். அத்தனையும் நீயே செய்தாய்,அதுவும் அத்தனை வேகமாய் முடிப்பாய், உன்னை தெரியாத ஆட்கள் ஏது கிட்டத்தட்ட நமது 30 கிராமங்களில். எனக்கெதுக்கு பதவிகள் என்று தன்னலமற்று உழைத்து இருக்கிறாய் கட்சிகளிருந்து கொண்டு நமது கிராமத்து மக்களுக்கு. இனி நீ இன்றி நடைபோட நீ மட்டுமே உதவமுடியும் அப்பா. எங்களோடு எப்பொழுதும் இருங்கள், கண்ணீர் சிந்தும் எங்களை, காற்றாகவாவது வந்து அணைத்து முத்தமிட்டு கண்ணீர் துடைத்து எங்கள் முன் செல்லுங்கள் நாங்கள் உங்களை பின்பற்றுகிறோம். 

என் அப்பாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

0 comments:

Post a Comment