Wednesday, April 16, 2014

பெண்மை யாதெனில்…….


எதோ விளையாட்டாய் ஒற்றை வரிக்காதல் கவிதைகளை எழுதிவிட்டு காலரை தூக்கிவிட்டு பெருமைப்பட்ட காலம் கடந்து, யதார்த்தத்தையும், உண்மையையும், உணர்வுகளையும் எழுதி ஆத்ம திருப்தியடையும் காலத்தை நெருங்கிகொண்டு இருக்கிறேன்.தேவா எனும் மிகச்சிறந்த எழுத்தாளர், நான் சென்றடைய வேண்டிய பாதையை காட்டியதுடன், என்னை தம்பி எனும் அழகிய உறவில் இணைத்து,உயர்த்தி பிடித்து, உலகை உற்றுநோக்க வைத்தார் எழுத்து எனும் கண்கள் மூலம்.
 
எழுத தொடங்கிய சில மாதங்களிலேயே ஏதேதோ வேலைப்பளுவின் நிமித்தம், சிறிது சிறிதாய் எழுத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். எனது வலைத்தளம் சக எழுத்தாளர்களால் தினம் தினம் உற்றுநோக்கப்பட்டாலும், சமீபத்திய எழுத்துக்களால் நிரப்பப்படாத நிலையில் கவனிப்பாரற்று அனாதையாய் விடப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாய். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் எனது வலைதளத்தின் பக்கங்கள் எழுத்துக்களால் நிரப்பப்படாமல் பாசனம் பிடித்தே போய்விட்டது பாவமாய்.
 
அலுவலகம் வந்தோம், வேலையை முடித்தோம். சில நாட்கள் எளிதாய், பல நாட்கள் மிகக்கடினமாய் என நகர்ந்தது எனது அன்றாட அலுவலக வேலைகள். “ஜெய்கர்” எனும் கல்லூரி மற்றும்,அலுவலகத்தோழன் அலுவலக வலைத்தளம் இருப்பதாகவும், உனது கருத்துகளை பகிரலாம் என கூறிமுடிக்க., ஏதோ ஆர்வத்தில் மீண்டும் இந்த முறை முயற்சிக்க ஆயுத்தமானேன்.,
 
முதல் நாள் பதிவை இட்டுவிட்டு,மறுநாள் காணும்போது திகைத்தே விட்டேன், அத்தனை பின்னூட்டங்களை ஒவ்வொன்றாய் காண பிரம்மித்தே போய்விட்டேன்., நிஜமாய் என் எழுத்தில் எதோ ஒற்றிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியாது, அத்தனை உற்சாக பின்னூட்டங்கள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து விழுந்தது இந்த சிறுவிதை மரமாக. அத்தனை உள்ளத்திற்கும் நன்றி கூறிவிட்டு, பயணத்தை தொடர ஆரம்பித்தேன்
 
ஒரு சில பதிவுகளை பகிர பகிர அத்தனை அன்பு ஊக்க மருந்துகள் என்னில் கலக்க ஆரம்பித்தது பின்னூட்டம் வடிவிலாய்..விளைவு, தொடர்ச்சியாக பதிவிட உள்ளுள் ஒரு உணர்வு மேலோங்க, சிறுவிதை முளைத்து இலைகள் விட ஆரம்பித்தது. சில உணர்வுப்பூர்வமான பதிவுகளை நானும், சில நலம் விரும்பிகளும் சமுதாய வலைத்தளங்களில் பகிர்ந்த சில நாட்களிலையே, ஒரு பிரபல இயக்குனரின், உதவி இயக்குனர் தொடர்புகொண்டார்., “எழுத்துகளில் யாதார்த்தமும், உணர்வுகளும் அதிக ஆளுமை கொண்டிருப்பதாய் உணர்கிறேன்., எனது அடுத்த முதல் படத்திற்கு கதை வசனம் எழுதி தருகிறீர்களா” என்ற பெரிய, அனுபவமில்லாத சுமையை என்மீது திடீரென சுமத்த, திக்குமுக்காடி போனேன்.,
 
பதில் அனுப்பினேன்., எதோ ஆத்மா திருப்திக்காய் எழுவதாகவும், மேலும் திரைப்படத்திற்கு எழுதும் அளவிற்கு எனது எழுத்துகளும், நானும் முதிர்ச்சி அடையவில்லை எனவும், அதுமட்டுமல்லாது அனுபவம் துளியும் இல்லை எனவும், அனைத்திற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் சிலவற்றை நான் செய்துமுடிக்க வேண்டியிருக்கு எனவும், சிலவருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் வருகிறேன், மன்னிக்கவும் என எனது நிலையை விவரித்தேன். “சரி உங்கள் விருப்படியே ஆகட்டும் விஜய். நான் சில பல திரைப்பட வசங்களை அனுப்பி வைக்கிறேன்., திருப்பி பாருங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்,” என்று கூறி முடித்துவிட்டு., முடிந்தவரை எனது தொடர்பில் இருங்கள் என்றார்.
 
எப்படியோ தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சி விட்டுவிட்டு தொடர்ந்தேன் எனது இயல்பு வாழ்க்கையை.எப்பொழுதும் தன்னிடம் ஒரு பெரிய பொறுப்பு வந்து சேரும்பொழுது கொஞ்சம் திக்குமுக்காடி தான் போவோம்., சில அசாத்திய மனிதர்கள் மட்டுமே தைரியமாய் நின்றுவிடுவார்கள் நிலைத்து எத்தகு சூழ்நிலையிலும். மீண்டும் எழுத்தை உருக்கி உருவாக்க ஆரம்பித்தேன்
நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம்.,
 
மீண்டும் ஒரு வாய்ப்பு அதே சமூக வலைத்தளத்திலிருந்து என்னை நோக்கி வந்தது., “ஹாய் விஜய், நான் கார்த்திக், உங்கள் எழுத்துகள் அருமை., நேரம் இருந்தால் , ஒரு கைதியைப்பற்றிய “அறம்” எனும், எனது குறும்படத்திற்கு வசனம், பாடல் எழுதி தரமுடியுமா என்று கேட்க , சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றேன் அத்தனை பயத்துடன்.
 
எப்படியோ நேரம் கிடைக்கும் தருணங்களில் எல்லாம், பாடலையும், வசனங்களையும் எழுதி அவருக்கு அனுப்பிவிட்டு,பதட்டம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க., “மிக அருமை விஜய்., இதையே வைச்சுகலாம்., சில காட்சிகளில் என்னும் கொஞ்சம் வசனங்களை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொன்றாய் விவரிக்க.,உள்வாங்கி அனைத்தையும் முடித்து கொடுத்தேன்.
 
சிறிது நாட்களுக்கு முன்பு., படத்தின் போஸ்டரை அனுப்பிவைக்க., அதில் வசனம் என்று எனது பெயரைக்காணும்போது ஒருவித சந்தோசம் மூச்சுவிட சிரமப்படுத்தியது.,சந்தோசத்தில் மனைவியிடம் காண்பிக்க.,கலக்கு விஜய் என்றாள்.,இந்த நிகழ்வு என்னை எச்சரிக்க தொடங்கியது, “எழுத்துக்கள் இன்னும் சீற்படவேண்டும்., இன்னும் புதைந்துகிடக்கும் அனைத்து உணர்வுகளையும் , உண்மையையும் , காதலையும் வடித்துவிட வேண்டும் என்று”.எழுத்துகளை பற்றிய யோசனையில் படுக்கையில் விழுந்தேன்.,
 
யோசித்துக்கொண்டே கண்களை மூடும் தருணத்தில், தடுத்தி நிறுத்தி “எனக்கு ஒரு சந்தேகம் விஜய்” என கேள்வியை கேட்க ஆரம்பித்தாள்., சரி கேள் எனும்போது என்னுள், என்ன கேட்க போகிறாள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.” இல்ல, படம் எடுக்குறப்ப , இயக்குனரும், ஹீரோவும் தான ஹீரோயின் கிட்ட பேச வேண்டிவரும், பழகவேண்டி வரும்., ஸ்கிரிப்ட் எழுதுறவங்க எல்லாம் ஹீரோயின் கிட்ட பழக தேவை இல்லைல” என்றாள். “அத்தனை அடக்கமுடியா சிரிப்புடன் அட ஆண்டவா ஒரு குறும்படத்துக்கேவா” என்று உள்ளுள் நிணைத்துக்கொண்டு., பதிலளித்தேன் அதெப்படி, ஸ்கிரிப்ட் அஹ எழுதுனவன் தானே சொல்லித்தரனும் ஹீரோயின் கிட்ட என்று பொய்யாய் கூறி முடிக்க. சரி என்று மெதுவாய் அவள் மௌனிக்க.,
 
உற்றுநோக்க ஆரம்பித்தேன் அவளை., அவளின் வாடிய முகத்தில் ஒட்டியிருந்தது, “பெண்மை யாதெனில்” என்ற, எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில், அத்தனை அழகாய்….

0 comments:

Post a Comment