Tuesday, February 25, 2014

ஞாயிற்றுகிழமை, நான்கு மணி…


தனிமையில் அமர்ந்து, மௌனமாய் நமது வாழ்க்கையை பின்னோக்கி பார்ப்பதில் அத்தனை ஆனந்தம்.,ஏதோ ஒரு மாலைநேரத்தில், மெதுவாய் சாரல்கள் தூவிட, பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, மழைநீரின் ஒவ்வொரு துளியை ரசித்துக்கொண்டு,தேநீரின் ஒவ்வொரு துளியை பருகிட கிடைக்கும் ஆனந்தம், வாழ்க்கையை பின்நோக்கி பார்ப்பதிலும் கிடைப்பதாய் உணர்கிறேன்.

பதின் வயதுகளில், நம்மில் அதிகபட்ச நபர்களுக்கு கல்வி கற்றல் என்பது கம்பி மேல் நடப்பது போன்று தான். அப்பாக்களின் அதட்டல்களிலும் அம்மாக்களின் எதிர்பார்ப்புகளில் பாதி வயதை பயத்தின் கையில் கொடுத்துவிட்டு பாவமாய் நின்று கொண்டிருந்தோம் என்பதே நிதர்சனமான உண்மை.கொத்தடிமைகளாய் பள்ளியை நோக்கி நகர்வோம் தினந்தோறும். நண்பன் ரமேஷ், சதீஷ் என நீண்டுகொண்டே பட்டியல் சென்றாலும் ஒருத்தருக்கொருத்தர் உதவிட முடியா நிலை தான் அப்பொழுதெல்லாம். பள்ளியை நோக்கி நடந்து செல்லும் போதும் அத்தனை பயம், இப்பொழுது நினைத்துபார்க்கும் தருணங்களில் கூட அதன் வலியை உணரமுடியும். ஒரு நாளைக்கு 8 வகுப்புகள், ஒவ்வொன்றிலும் தினசரி தேர்வுகள். இந்த தினசரி தேர்வின் முடிவும் அன்றே கைகள் சிவக்க சிவக்க கிடைத்துவிடும் பாரபட்சமின்றி அனைத்து நண்பர்களுக்கும்.

ஒருவழியாய் திகில் பயத்தில் ஆரம்பிக்கும் திங்கள், கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து வெள்ளியில் நிற்கும். வெள்ளிகிழமைகள் ஒவ்வொன்றும் தேவநாட்களாய். சிரித்துகொண்டே இருப்போம் எத்தனை அடிவாங்கினாலும், சனி- ஞாயிறு விடுமுறை என்ற கனவிலே. நாங்கள் கேட்ட மிகச்சிறந்த சுதந்திர முழக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை கடைசி மணி என்றே ஆணித்தரமாய் கூறிவிடலாம். சிறை திறந்த கைதிகளாய் சிதறி ஓடுவோம் பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு.

பள்ளியின் எதிரிலிருக்கும் வாரச்சந்தையை சுற்றி திரிவோம் கையில் காசு இல்லாமலே ஆனந்தமாய்.ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் நிறையும் எங்கள் இதயங்களில் ஆழமாய். வீடு சென்று விழும் எங்களின் வயிறுகள் உண்ணாமலே நிறையும் சந்தை தின்பண்டங்களின் வாசணையில். ஊர்முற்றத்து கோவிலில் ஒன்று கூடி ஆசை தீர விளையாண்டு தீர்த்துவிட்டு,திட்டம் தீட்டுவோம் அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட்டுக்கு. நாங்கள் விளையாடிய விளையாட்டுகளை விட, ஓட்டிச்சென்ற ஆடுமாடுகள் விளையாடும் விளையாட்டிற்கு அளவில்லை.எப்படியோ சனி முடிந்துவிடும் விளையாட்டு களைப்பில்.

ஞாயிற்றுகிழமை -இது நாள் அல்ல, ஒரு மந்திரம். இந்த மந்திரத்தில் பதின் வயதுகள் மட்டுமல்ல, ஆதி தொடங்கி, அந்தம் முடியும் வயதுவரை மயங்கித்தான் போயிருந்தார்கள். வாரம் முழுவதும் உழைத்து களைத்து, ஒய்வெடுப்பதற்காய் ஒதுக்கிவிடப்பட்ட இந்த நாளில் துவக்கமே அத்தணை மங்களகரமாய் இருக்கும். கோதுமையும்,நெல்லிலும் வளர்ந்த நாட்டுகோழிகள், மஞ்சளில் குளித்து, கொத்தமல்லிசாந்தில் மணக்க ஆரம்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஊரெங்கும். ஆர அமரஉண்ணும் அழகை ஊரின் எல்லா திசைகளிலும் உணரமுடியும். உண்டு முடித்த நொடியினில் வேலைகள் அணைத்தும் வேகமாய் முடியும் இவர்களது ஆர்வத்தில்.

பொழுது சாய்வதற்குள் முடித்து விடு என்று ஊரின் ஒவ்வொரு தெருவிலும் கேட்கலாம் சிறுசு பெருசுகளின் கட்டளைகளை. இன்னும் சில தெருக்களில், நாலு மணிக்குள்ள ஆகணும் வேலை என்று அபாயமணி கூட அடிக்கும். இந்த ஆபாயமணியின் காரணங்கள் அத்தணை வயதிற்கும் தெரியும்.

நேரம் நான்கு மணி-என் தமிழினத்திற்கே உரிய கலை ரசணை ஒவ்வொருவரின் மனதிலும் மெதுவாய் துளிர்விட ஆரம்பிக்கும் மணி நான்கை நெருங்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பே. ஊரே ஒன்று கூட ஆரம்பிக்கும், இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன் என ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் சத்தம் வரும் தருணங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் இருக்கும் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு இருந்திருப்பார்கள்.பதின்வயது பருவங்கள் படிய வாரிய தலையுடன், பவுடர் பூசிக்கொண்டு ஊர்முற்றத்து கோவிலுக்கு வந்து சேர்ந்துவிடும். எல்லோரும் வந்தாச்சாப்பா என்ற ஊர் பெரியவரின் சத்தம் உதட்டை விட்டு நகர்வதர்க்குள், எல்லோரும் வந்தாச்சுன்னு சொல்லும் ஊர் மக்களின் வார்த்தைகளில் அவசரம் நன்றாய் தெரியும்.கிளம்ப ஆரம்பிக்கும் கூட்டத்தை ஊர்பெரியவர் வழிநடத்தி செல்வார். அத்தணை கூட்டமும் அவரின் வீட்டை சென்றடைந்திருக்கும். யார் அவர்?.- “ஒரு பணத்தான் செட்டியார்”, வசதி கம்மியாய் இருந்தாலும் ஊரைவிட்டு அதிக தூரம் பயணித்து நாட்டு நிலவரங்களை தெரிந்து வைத்துகொண்டு, வெகு தூரம் சென்று புதிது புதிதாய் பொருட்களை வாங்கிகுவித்திருக்கும் கிட்டத்தட்ட ஊர் பிரபலர்.

நெருங்கிய கூட்டத்தை கதவை திறந்து வரவேற்று அத்தணை கூட்டத்தையும் பெரிய அகன்ற கார வாசலில் அமரவைத்து, ஊர் பெரியவருக்கு நாற்காலி போட்டு அமரவைத்துவிட்டு நகருவார். ஊரே அவரை உற்றுப்பார்க்கும் தருணத்தில், உணர்ந்தவராய் மெதுவாய் வீட்டின் உள்ளிருந்து நகர்த்தி வருவார் அந்த கருப்புவெள்ளை தொலைகாட்சியை.அத்தணை கம்பீரம் அந்த தொலைக்காட்சிப்பெட்டி மரதிறப்பானுக்கு .இரண்டு கைகளில் பிடித்து மரதிரப்பானை திறக்க, அத்தணை வயது உதடும் மலரும் மெதுவாய். தொலைகாட்சியை செயல்பெற செய்ததும் “வாசிங் பவுடர் நிர்மா, வாசிங் பவுடர் நிர்மா” விளம்பரம், அதைத்தொடர்ந்து “கோல்கேட்” விளம்பரம் என ஒவ்வொன்றாய் மாறி.படம் ஆரம்பித்ததும் “20 ரீல்” என்பதை விவரம் தெரிந்த பெரியவர் படித்ததும், கைதட்டும் சத்தம் காதை பிளக்கும்.

படம் என்ன என்பதை காண ஆவலாய் ஊர் பெரியவர்கள். யார் நடிகர்கள் என்பதை காண ஆவலாய் பதின் வயதின் பெற்றோர்கள்,”சண்டை பயிற்சி” எனும் வார்த்தையை காண ஆவலாய் பதின்வயதுகள். படம் ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை அத்தணை நிசப்தம் காதல் காட்சிகளில் , அத்தணை திட்டல்கள் ஹீரோயினை வில்லன் இழுத்து செல்லும் நேரங்களில். அத்தணை பாராட்டுகள் வில்லனை ஹீரோ அடிக்கும் போதெல்லாம், அத்தணை சிரிப்புகள் காமெடி வெடிக்கும்பொதெல்லாம்.

செய்திகளுக்கு பின் திரைப்படம் தொடரும் என்ற எழுத்தின் முடிவில் அத்தணை விவாதங்கள், அத்தணை எதிர்பார்ப்புகள் அணைத்தும் அழகிய உணர்வுகளை தந்திருக்கிறது ஓவ்வொருவருக்குள்ளும். தண்ணி வேணும் என்று கெஞ்சுவது ஒவ்வொன்றாய் முளைக்கும் கூட்டத்தின் நடுவிலிருந்து.முகம் கோணாமல் தண்ணீர்கொடுக்கும் “தவமணி” அக்கா, மரியாதைக்குரியவராய் வாழ்ந்தார் ஒவ்வொருவரின் உள்ளத்திலும். “திரைப்படம் தொடரும்” எனும் எழுத்து மீண்டும் நிமிர்ந்து எழுந்துவிட செய்துவிடும்.”வணக்கம்” எனும் அந்த வார்த்தை செய்யும் மாயாஜாலங்களை எளிதாய் விவரித்து விடமுடியாது.

இந்த நான்கு மணி படத்தின் “வணக்கம்” எனும் சொல், பெரியவர்களின் மனிதில் ஏக்கத்தையும், பெற்றோர்களின் மனதில் அடுத்தவாரத்தின் பொறுப்பை நிணைவுபடுத்துவதோடு நில்லாமல்., என் பதின்வயதுகளின் “திங்கட்கிழமை” பயத்தை ஒட்டிவிட்டுவிடும், மூச்சுவிட முடியா கணத்துடன் ஒவ்வொருவரின் இதயத்திலும்..

0 comments:

Post a Comment