Thursday, February 20, 2014

சில நேரங்களில் சில அசாத்திய மனிதர்கள் - என் தேசத்து வீரன்



வெற்றி என்பது எதிரியை சாய்க்கும் நொடியில் மட்டுமே என்றால் வெற்றிக்கான பரிசு எதிரியின் கண்ணீரோ அல்லது ரத்தமாய் மட்டுமே இருக்க முடியும்.ஒரு நொடியில் வெளிப்பட்டுவிடும் நிகழ்விற்கு பெயர் வெற்றி என்பதினில்லை, அந்த ஒரு நொடி நிகழ்விற்காய் தன்னை தினமும் தயார்படுத்தி தன்னை அர்பணித்து பழகிய மிகச்சிறந்த அசாத்திய தைரிய குணமே வெற்றி.

என் தேசத்துக்கே உரிய வீரம், ஆளுமை, இந்த மண்ணை தாண்டி எங்கு தேடியிருந்தாலும் நிச்சயமாய் கிடைத்திருக்காது நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில். அடங்கா முரட்டு குதிரையையும் அடக்கி கடிவாளமிட்டு, அதன் மீது அமர்ந்து தனது முரட்டுதோள்களில் ஈட்டி ஏந்தி புயலென கிளம்பி, புலியென எதிரிகளை தும்சம் செய்துவிட்டு வெற்றி கூச்சலிடும் நமது முன்னோர்களின் மிகப்பெரிய வீரமும் வெற்றியும் ஒருநாளில் உறுதிசெய்யப்பட்டதன்று, பலமாதங்களாய் தோள்களை கேடையமாய், எலும்புகளை ஈட்டியாய் பதம் செய்ய தவறாமல், செதுக்கிவிட்ட ஒரு மிகப்பெரிய ஆற்றலே வீரமாகவும், வெற்றியாகவும் வெளிவரும் போர் நாட்களில்.

எதிரி யாரெனவும் , பலமென்னவென்றும் தெரிந்துகொள்ளும் முன்பே தீயென கிளம்பி, சரித்திரம் படைக்க துடித்த ஒவ்வொரு வீரனும் மிகச்சிறந்த அசாத்திய மனிதனே. எத்தனை பெரிய வீரம் இருந்திருந்தால் முன்னும் பின்னும் முரண்பாடற்று கரடு முரடாய் வெட்டி சாய்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் பம்பரமாய் சுழன்று வெட்டுகளையும் கீறல்களையும் தோளில் பரிசாய் சுமந்துகொண்டு,நொடிகளில் கூட கண் அயராமல், கூர்மையாக்கி,கொன்று குவித்திருக்க முடியும்.

தனது ஒவ்வொரு முன்னோக்கி நகரல்கலும் எத்தனை இன்றியமையாதது என்று நன்றாய் தெரிந்து வைத்திருப்பான். தனது வெற்றிகள் யாவும் தனது ஆளுமை சொந்தக்காரரான அரசனுக்கு சேரும் என்பதை தெரிந்திருந்த போதும் வீரம் என்பதை அளவில்லாமல் உருக்கி ஊற்றிக்கொண்டவன் உடல்முழுவதும்.ஒவ்வொரு அயல் நாட்டு மனிதனையும் தன் மண்ணில் கால் தடம் பதிக்கவிடாமல் போராடியவன். குடும்பம் என்ற அழகிய வட்டத்தை தனது வீரத்துக்காய் விட்டுகொடுக்காமல் போராடியவன்.

எதோ இனத்துக்கான போராட்டமாய் பாராமல் அவமானமாய் பார்த்து தன் தோளில் வெற்றியை சுமந்துகொண்டு வீழும் வரை போராடி ஜெயம் எனும் வார்த்தையை கேட்டு முடித்தபின்னரே உயிரை மண்ணில் சாய்க்கும் அசாத்திய மனிதன்.தன்னோடு முடியாமல் தனது வீரத்தை விதைத்துவிட்டு மண்ணின் மானம் காக்க போராடியவன்.

போர் என்று முழங்கும்போதெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி, புருவம் உயர்த்தி, நான் தயார் என்ற கர்ஜனையில், புலி பாய்ச்சலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வீரம் அவனது உயரிய அடையாளம். அத்தனை வீரத்தையும் சில நேரங்களில் பிய்த்து வைத்துவிட்டு தனது துணையின் காதலை அறிந்து வாழ்வியலை அழகாய் ரசித்து வாழ்ந்துவிட்டு, மண்ணிற்கான மானம் காக்க நேரிடும் நேரங்களில் வீரத்தை தன்னில் பூட்டிக்கொண்டு அசரா நெஞ்சோடு கொஞ்சம் விளையாடிவிட்டு வர கிளம்பிவிடுவான்.

வெற்றியா தோல்வியா என்ற முரண்பட்ட இருவேறு கருத்துகளை இவனில் வைத்திருப்பதில்லை. முடியும் வரை முடித்துதள், எத்தணை பேரை கிழித்தது தன் வாள் என்பதே இவனது கணக்கு.பயம் என்ற ஒற்றை உணர்வு இவனது நாடி நரம்புகளை தொடக்கூட நினைத்ததில்லை இவனின் வீரம் கண்களில் பொறியாய் தெறிக்கும் வரை.

ரத்தம் சிந்த வைப்பது என்பது கொடூரமான நிகழ்வாய் தெரிந்தபோதும், இனத்திற்கான, மண்ணிற்கான போராட்டம் என்றபோது இனம்தலைக்க சீறிடும் ஒவ்வொரு வீரனின் மார்பிலும் விளைந்திருக்கும் வீரம் நியாயத்திற்கு உரியதே என்பது இவனின் உணர்வு.

தன்னை போர்க்களத்தில் தேடும் தாய்க்கோ, தாரத்திற்கோ, வேல்கம்பை மார்பில் சுமந்திருக்கிறேன், முதுகில் அல்ல என்று தனது வீரத்தை பாய்ந்த வேல்க்கம்பில் மாட்டிவிட்டு விதையாகியிருப்பான், இன்னொரு முறை இதே வீரத்தை, வீழ்ந்த மண்ணிற்கு புதியதாய் விளைச்சலாக்கி விட..

1 comments:

Unknown said...

அழகாக உள்ளது

Post a Comment