Friday, January 3, 2014

நேசமிகு பேருந்து பயணத்தில்......


இன்றும் அவசர அவசரமாய் ஓடிப்பிடித்தேன் எனது வழக்கமான பேருந்து ஆகிய T151ஐ, படிக்கட்டில் காலை வைத்ததுதான் தெரியும் அதற்குள் நடத்துனரின் இயல்பான அறிவுரையான "மேல வா மேல வா" எனும் மந்திரம் காதை கிழித்தது.இடம் இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாது, அனால் நடத்துனருக்கு இருக்கும் ஒரே கவலை அல்லது அறிவுரை இது மட்டுமே என்று கூறலாம்,அத்தனை அழகாய் சலிக்காமல் கூறிக்கொண்டே சற்று கடிந்தும் கொள்வார்.

இடம் இல்லாமல் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கும் பெரியவர்கள், பள்ளிமாணவர்கள், வட மாநிலத்தவர்கள், முக்கியமாய் கணினிதுறையை சேர்ந்தவர்கள் தான் இவருக்கு அன்றைக்கு வாய்த்த அடிமைகள். சில்லறை சரியாக கொண்டு வர மாட்டார், அனால் வார்த்தைகளை மட்டும் அள்ளி வீசுவார் வேண்டாம் என்ற போதும்.

பாவம் இவருக்கு அரசுத்துறையில் பணியில் சேரும்போது பணப்பை கொடுத்ததோடு, பணப்பை நிறைய கோபத்தை நிரப்பி கொடுத்து இருப்பார்கள் போல. அதை மட்டுமே இல்லை என்று சொல்லாமல் கொட்டுவார். என்னுடன் குறைந்தது பத்து பயணிகள் செம்பாக்கம் நிறுத்தத்தில் ஏறியிருப்பார்கள்.

ஒவ்வொருவராக பணத்தை அனுப்பி வைத்தோம் பயனசீட்டிற்காய்.ஒவ்வொருவருக்கும் பயணச்சீட்டு சரியாய் வந்தது எப்பொழுதும் போலவே. எப்பொழுதும் போலவே ஒன்று இரண்டு ரூபாய் சில்லறைகள் வந்து சேரவில்லை.எப்பொழுதும் போலவே இன்றாவது கொடுத்து விடுவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தது மட்டுமே, சில்லறை கிடைக்கவில்லை எப்பொழுதும் போல்.

இதற்கிடையில் ஒருவருடைய இருபது ரூபாய் நோட்டு மட்டும் திரும்பி வந்தது முழுதாய் பயணச்சீட்டும் இல்லாமல். பணத்தை கொடுத்து அனுப்பிய வயதான பெண்மணி கேட்டார், ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள் பயணச்சீட்டு கொடுக்காமல் என்று, அதற்குள் நடத்துனரே கூட்டத்தை உடைத்து கொண்டு வந்தார் முன் கதவருகே.

எட்டுரூபாய் பயனச்சீட்டிற்கு இருபது ரூபாய் கொடுத்து இருக்க, சில்லறைக்கு எங்க போறது, சில்லறை கொடு இல்லையென்றால் இறங்கு கீழே என்றார். சில்லறை இல்லை என கூறிய அடுத்த நொடியில், கையை பிடித்து இறங்கு கீழே என்று தள்ளினார் நடத்துனர்.

சொன்னா நம்ப மாட்டீங்க, குறைந்தது ஏழு பேருக்கு மேல் ஒரே நிமிடத்தில் சில்லறை என்கிட்டே இருக்கு இந்தாங்க, இழுத்து தள்ளாதீங்க என சில்லறையை நீட்டினர். அத்தனை பேரும் நீங்கள் தினமும் திட்டித்தீர்க்கும் கணினித்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே.. ஒருவர் மேல வாங்கம்மா என கை பிடித்து தூக்கி விடுகிறார், மற்றொருவர் நடத்துனரிடம் விவாதிக்கிறார், மற்றொருவர் சில்லறை கொடுத்து கொண்டு இருக்கிறார், மற்றொருவர் 9884301013, 9445030516 அழைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்குறார்.

இவர்களை தவிர ஜடமாய் நின்றவர்களின் எண்ணிக்கை 50 இருக்கும், இவர்களில் சிலர் அரசாங்க அதிகாரிகள், தான் மட்டுமே இந்த உலகத்தில் வாழ படைக்கப்பட்டவர்கள் என எண்ணி சக மனிதனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத,இழிவுபடுத்தும் மேல் வகுப்பை (குறிப்பிட்டது ஜாதியை அல்ல,அந்தஸ்தை) சார்ந்தவர்கள், வேடிக்கை பார்ப்பது மட்டுமே தன் வேலை என நினைக்கும் பலசாலிகள், இப்படி எத்தனையோ பேர் அங்கே ....

பெண்மணி இறங்கும் இடம் வந்ததும், மெல்லிய குரலில் உதிர்த்து விட்டு போன வார்த்தைகள் அத்தனை பேரின் இதயத்தையும் நொறிக்கிவிட்டு போனது..

"சலவை சட்டை கலையாம போறானுக, இங்க்லிபீச பேசுறானுக, பொம்பளபிள்ளைககூட ரோடு ரோடா சுத்தராணுக,கட்டு கட்டா சம்பாதிக்கிராணுக அப்டின்னு ஏசி இருக்கேன்"..ஆனா நீங்க யாரும் மனுசன மதிக்க மறக்கலப்பா..வரேன் சாமிகள".....

0 comments:

Post a Comment