Friday, January 31, 2014

உன்னிடம் பேச….


இந்த இயற்கையின் மிகப்பெரிய பிரம்மிக்கும் நிகழ்வுகளில் ஒன்றான ரசாயன உணர்வுகள் இவ்வுலகத்தில் யாரையும் விட்டுவைத்ததில்லை, நான் மட்டும் விதி விலக்கா என்ன?. அதைத்தான் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

நிறுவனத்தில் நான் அமர்ந்து குறைந்தது நான்கு வருடங்களை தாண்டி இருக்கும் என எண்ணுகிறேன். இந்த கால கட்டங்களில் எனக்கு அருகேயான இருக்கையில் பல நபர்களை கடந்து இருக்கிறேன். சில பெண்கள்,சில ஆண்கள். ஆனால் பிரம்மிக்க வைக்கும் நபரை கண்டதில்லை என்று சொல்ல முடியும் இந்த இரண்டு நாளைகளுக்கு முன்பு வரை, ஆனால் இப்பொழுது…

கடந்த ஒரு வாரகாலமாக சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அந்த இருக்கைகாய் தினம் தினம் போட்டிகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அன்றும் அப்படி தான், கடிகார முள் 11 ஐ தொட்டு கொண்டு இருந்து இருக்கும் என நினைகிறேன். திடீரென என்னை கடந்து சென்று அமர்ந்தாள் அதே இருக்கையில்.

சில நூறு நபர்களை நான் அந்த இருக்கையில் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு வருகையும் ஏதோ ஒன்று செய்யும் தானே நம்முள். அப்படித்தான் என்னுள்ளும் நிகழ்ந்தது.

மெதுவாய் கவனிக்கத் தொடங்கினேன் அவளை. என்னிடம் எப்பொழுதாவது பேசுவாள் என்றால் நிச்சயம் நான் நிமிர்ந்து தான் பேச வேண்டும் அவ்வளவு மிககச்சிதமான உயரம். பெயர் என்னவாய் இருக்கும், கொஞ்சம் சாய்ந்தும், நிமிர்ந்தும், காணதது போல் கண்டத்தில் “சுபத்ரா” என்றிருந்தது. நல்ல அழகிய பெயர் சுபம் உண்டாகட்டும் என்று வாழ்த்துவது போல்.

சடாரென்று திரும்பினாள் என்பக்கம், ஏதோ பேச வந்தாள் என்னிடம், பிரம்மித்து போய்விட்டேன். அத்தனை அழகு, அத்தனை அழகில் திரியும் திமிரை அழகிய நெற்றிப்பொட்டின் வழியாக சரிசெய்துவிட்டாள் ஒற்றை கருப்பு நிற சாந்துபொட்டில். ஒற்றைக்கேள்விக்கே பதிலளிக்க தடுமாறுபவன் நான், இதில் ரெட்டை கேள்விகள் கண்களிலிருந்தும் , உதடுகளிலிருந்தும் ஒரே நேரத்தில்.. என்ன செய்ய?. அத்தனை வார்த்தைகள் பேசுகின்றன அவள் கண்கள் உதடுகளை விட..

என் இதயம் பேசதுடித்தும், இதழ்கள் பேச தடுமாறின. அதற்குள்

Excuse me, any help?. I am siva, U?

முந்திகிட்டாப்ள நம்ம உயிர் தோழன். ஏனெனில் இவனோடு தான் இந்த நான்கு வருடமும் குப்பைகொட்டுகிறேன். சரி இந்த பொண்ணோட நட்பும் இவனுக்கு தான் போல இருக்கு என தலைகுனிந்த எனக்கு, ஆச்சர்யம் காத்து இருந்தது.

“No thanks.”

பட்டுன்னு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி பதில். கொஞ்சம் வித்தியாசமான பொண்ணு தான். தேவை எனில் கேட்கிறேன் என்று அளவான பேச்சு. நிச்சயம் அசத்திவிட்டாள் என்னை. திடீரென என்பக்கம் திரும்பினாள்.அத்தனை சந்தோசம் ஏதோதோ பேசினாள். யார் கவனித்தார்?.. பேசும் அழகையே கண்டுகொண்டு அவள் பேசியதை மறந்துவிட்டேன். தள்ளி நின்றே பேசினாள்.

சிறிதுநேரத்தில் கிளம்பிவிட்டாள் மதிய உணவிற்கு. காத்திருந்தேன் ஒரு முடிவோடு.சிறிது நேரத்தில் திரும்பினாள். மீண்டும் அவளையே உற்றுநோக்க தொடங்கிவிட்டேன் கண்டும் காணதது போல். இடையிடையே என்னிடம் எதோ கேட்க வருவாள் பிறகு அவளது கைப்பேசியில் உரையாடுவாள். கவனிக்க தொடங்கினேன் காதுகொடுத்து. அத்தணை வார்த்தையிலும் தெளிவு, கண்ணியம்.

மரியாதை கொடுத்தே பேசினாள் கைப்பேசியில் பேசும் போதும்கூட. எதிர்முனை கோபத்திற்கு கூட அன்பையே உதிர்த்தாள். பேசி முடிக்கும் போதும் உதிர்க்கும் புன்னகையில் அனைத்தும் மறந்து கவனித்துகொண்டிருந்தேன். அவ்வப்பொழுது ஒரு எண்ணம் என்னை குடைந்து கொண்டே இருந்தது. அழகிலும், நெத்திபொட்டு தெளிவான பேச்சிலும், நேர்த்தியான உடையிலும், அழகிய புன்னகையிலும், மரியாதையிலும், கண்ணியமான குணத்திலும் தெளிவாய் நிற்கும் பொண்ணுக்கு யாரவது பின்னாடி நிற்காமலா, காத்திருக்காமல இருப்பார்கள்????.

எப்படியாவது பேசி விட வேண்டும் மிக விரைவில், அதுவும் மிக அருகில் நெருக்கமாய் முகத்திற்கு அருகில் சென்று.. இது சராசரியான ஆசை தானே , தவறா சரியா என்று ஆராய்ந்து பார்க்க நேரமில்லை. எதிர்பார்த்தது போலவே எனது பக்கம் திரும்பி நெருங்கினாள். ஆசையாய் காத்திருந்த எனக்கு மீண்டும் எதிரி என் நண்பனே.

“Forget to inform that u have been asked to report at mepz from tomorrow onwards.”

நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள்.கடவுளை வேண்டிக்கொண்டு ஒருமுறை ஒருமுறை என்ற நிமிடத்தில் என் அருகே வந்தாள். அத்தணை சந்தோசம்.

என்னைத்தொட்டு என் முகமருகே இன்னும் நெருக்கமாய் நெருங்கி பேச ஆரம்பித்தாள். அத்தணை அருகில் அவள் முகத்தையும் கண்ணியம் பேசும் இதழையும் பார்க்க ஆரம்பித்தேன், ரசித்துக்கொண்டே.

“அம்மா நான் கிளம்பிவிட்டேன், வந்துவிடுவேன் “. இது என் office vnet நம்பர்.



Wednesday, January 29, 2014

கண்கள் இரண்டில்…


மிகச்சிறந்த எழுத்து என்பது நட்பு, காதல், அன்பு, நேசம், காமம், தனிமை, உணர்வுகள், புரட்சி, விழிப்புணர்வு இப்படி அனைத்து பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்பதை நன்கு அறிவேன். ஆதாலால் மாறுபட்ட பாதையில் இன்று பயணிக்க நினைத்த எனக்கு, இன்றைய ஒரு நிகழ்வு மீண்டும் யாதார்த்த உணர்வுகள் பாதையிலே பயணிக்க வைத்தது. எனக்கும் , நான் தினந்தோறும் பயணிக்கும் பேருந்திர்க்குமான உறவு – மாணவனுக்கும் ஆசிரியருக்குமான உறவு போன்று பதிகிறது என்னுள், காரணம் ஒன்றும் மிக ரகசியமான ஒன்று இல்லை, வழக்கமான கற்றலும் கற்பித்தலும் என்பதே.

இன்றும் அதே பேருந்து, அனால் புதுமையான நிகழ்வுகள். செம்பாக்கம் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த எனக்கு, சைகை காட்டி கண்சிமிட்டி கொஞ்சம் கத்தி, வந்து அமரும் படி அழைப்பை விடுத்தது அந்த பேருந்து. அமர்ந்து இளைப்பாறிய கொஞ்ச நேரத்தில் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தது. இரண்டு முதிய வயது தம்பதிகள் ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக்கொண்டு படிக்கட்டில் தட்டித்தடுமாறி ஏறினர். பார்த்ததும் அவசர அவசரமாய் நானும் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த நல் உள்ளம் கொண்ட அறிமுகம் இல்லா பேருந்து நண்பரும் அவர்களை அமரும்படி கூறிவிட்டு அருகே நின்று கொண்டோம்.

கசங்கிய சட்டை, தலை முழுவதும் காயத்தழும்புகள், பார்வை பறிபோய்விட்டது என்பதை உணர்த்தும் கருப்புநிற கண்ணாடி,உழைத்து இழைத்துவிட்டதை உணர்த்தும் ஒள்ளிய தேகம் இவை அவரின் அடையாளங்கள். துணிச்சலான பார்வை, தனியாய் சாதித்த தைரியம், சற்று தளர்ந்த பார்வையும் உடலும், தள்ளாடும் வயதிலும் சேலையில் தன் உடல்மறைத்து தன்மானம் காக்க முயலும் ஒழுக்க நெறிகள், இவைகள் தான் தன்னம்பிக்கையில் தன் வயதை மறைத்து வைத்து இருக்கும் அந்த வயதான அம்மையாரின் அடையாளங்கள்.

மெதுவாக பேச ஆரம்பித்தார் அந்த அம்மையார்.

“தம்பி குமரன் நகர் தாலுக்க ஆபீஸ் போகணும்.எப்படி போகணும்னு கொஞ்சம் சொல்றியா?.”

“இந்த பேருந்து சோழிங்கநல்லூர் வரை தாங்க போகும், அங்க இறங்கி குமரன் நகர் பேருந்து ஏறனும். நான் அந்த வழியா தான் போகிறேன். நான் கூட வருகிறேன்”.


“நீயும் அங்க தான் போறியா, ரொம்ப சந்தோசம் தம்பி. “.

கொஞ்ச நேரம் நான் அவரை உற்று கவனித்ததை அந்த அம்மா பார்த்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நான் கேட்காத கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க தொடங்கினார்.


நாங்க அந்த வித்யா மந்திர் பள்ளிகூடத்துக்கு முன்னாடி தான் பெட்டிக்கடை வைச்சு இருந்தோம் தம்பி, 9 வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய விபத்துல லாரி இவர் தலைமேல ஏரி தலை நசுங்கி, எப்படியோ கடவுள் அருளால உயிரோட திருப்பிகிட்டு வந்திட்டோம், ஆனா ரெண்டு கண்ணும் போய்டுச்சு. அப்படியே ஒடிஞ்சு போயி உட்கார்ந்துட்டார் மனுஷன். ரெண்டு பொண்ணுங்க எங்களுக்கு. அவுங்கள கரை சேத்தனும்ல அதான் பயந்துட்டாரு.இவரை வீட்ல உட்கார வைச்சிட்டு கடையும் பாத்துகிட்டு கொஞ்சம் வீட்டு வேலைக்கும் போயி, இதோ இப்பதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிவைச்சு கரை சேத்தினேன் தம்பி.

படபடத்த இதயமும் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லபடியா கல்யாணம் பண்ணிவைசிட்டாங்க அப்டினதும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு.

என்னமோ தெரியல தம்பி கொஞ்ச நாள் எனக்கு கண் பார்வை வேணும், எல்லாத்தையும் பார்க்கனும்னு ஆசை படுறாரு தம்பி.அதான் போனவாரம் கண்ணு ஹாஸ்பிட்டல்க்கு போனோம். நரம்பு எல்லாம் நல்லபடியா இருக்காம், கண்ணு பொருத்தினா கண்ணு தெரிய வாய்ப்பு இருக்குனு சொன்னாரு தம்பி. சந்தோசமா போய்டுச்சு எனக்கு. அவருகிட்டையே என் கண்ண எடுத்து பொருத்துங்க தம்பி, எவ்ளோ செலவாகும்னு கேட்டேன் . அதுக்கு டாக்டர் சொன்னாரு அப்டில்லாம் நீங்க சொல்றபடி எல்லாம் பொறுத்த முடியாது, உங்க கண் அவருக்கு பொருந்தனும், அதுமட்டும் இல்லாம நிறையா விதிமுறைகள் இருக்கு உங்க கண்ண பொறுத்த, ஏனெனில் நீங்க உயிரோட இருக்கும்போது பண்ணின தப்பாகிடும். இதுக்கு ஒரு மனு எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க தம்பி, அதான் தாலுக்கா ஆபீஸ் வந்து இருக்கோம்னு சொன்னாங்க.

ஒரு நிமிடம் பேச வார்த்தைகளற்று நின்று போனேன்.

என் தேச மயானங்கள், எத்தனையோ கண்களை தின்றிருக்கிறதே சத்தமே இல்லாமல் உயிரோடு, இன்னும் எத்தனையோ…

பிறந்ததில் தொடங்கி, இறந்தது வரை எத்தனை மனித உயிர்கள் இவ்வுலகை காண ஏங்கி, கடைசி வரை இருண்ட கற்பனை உலகிலேயே மறித்ததோ.

மயானங்கள் தின்றது போதும், இனியாவது மனிதங்கள் தழைக்க வித்திடுவோம் நமது கண்களில்.

இறங்க வேண்டிய இடமான சோழிங்கநல்லூர் நெருங்கிக்கொண்டு இருந்தது.அழகாய் அவரது காதில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பொறுமையாய் அந்த அம்மா விளக்கிக்கொண்டு இருந்தது. காதல் என்பது கண்களை தாண்டிய இதயத்தில் வாழ்கிறது என்பதை என்னுள் ஆழமாய் வேரூன்றி நிற்க வைத்து விட்டது.

சிறிய நிகழ்வுகளுக்கெல்லாம் சினம் கொள்ளும் என்னைபோன்ற இளம் தலைமுறைக்கெல்லாம் நேசத்தை கற்றுக்கொடுக்கும் பல உதாரண மனிதர்களில் இருவரை கண்டுவிட்டேன் என்ற பெருமிதத்துடன்


அவர்கள் இருவரின் கரங்களை பிடித்து சாலையை கடக்க முயற்சிக்குறேன் – அவர்களின் அளவு கடந்த அன்பினில் சிறிதளவாவது என்னுள் கலந்துவிடட்டும் என்று பற்றிகொள்கிறேன் இன்னும் இருக்கமாய் கரங்களை.

Monday, January 27, 2014

மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?..



எப்பொழுதெல்லாம் நமது நிகழ்காலத்தில் சலிப்பு தட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் சிறிய மாற்றத்தை நோக்கி பயணிப்பது என்பது இயல்பான ஒன்றே. அதுபோன்ற வகைப்படுத்தப்பட்ட மாற்றங்களில் சில வகைகள் தான் நண்பர்கள் சங்கமம், சினிமா, சுற்றுலா, தேநீர் விருந்து, மதிய விருந்து...

நண்பனை காண நேற்று செம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எப்பொழுதும் நாம் காத்திருக்கும், நமக்கு தேவையான பேருந்தை தவிர அத்தனையும் கடந்து போகும் நமது பேருந்து நிறுத்தத்தை. அப்படி தான் சலித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

"நைனா, சைதாபேட்டைக்கு இன்னா பஸ் போகும்?" சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மனிதர். வேஷ்டி சட்டை அணிந்திருந்த அவர் சற்று தடுமாற்றத்துடன் அருகில் நின்று கொண்டிருந்தார். அவரைப்பற்றி யூகிப்பதற்கு முன்பே அவரது தள்ளாடிய நிலை உணர்த்திவிட்டது, மது அருந்திருக்கிறார் என்பதை.

என் வாழ்க்கை பயணத்தில் பல மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் இது போன்று நிலையில் இருக்கும் மனிதர்களை. அதாலால் அவர்களை ஒதுக்குவதில்லை எப்பொழுதும்.

மெதுவாய் பக்குவமாய் கூறுகிறேன் 5A பேருந்து சைதாபேட்டைக்கு போகும் என்று.

“சரி நைனா, என்னாண்ட பொஞ்சாதி சொல்லுச்சு 5A போகும்னு, அவகிட்ட இன்னாத்துக்கு பேச்சு வைச்சுகினு.அதுக்கு தான் அப்பால இருந்து நின்னுகிட்டே இருக்கேன் யாரண்டையாவது கேட்டுகினு ஏறிக்கலாம்னு.” ஓ அப்படீங்களா?..

ம்ம் 5A பஸ் போகும். அவுங்க சொன்னது சரி தான். அவரே பேச ஆரம்பிச்சார், குழந்தைய போல ஒன்னு விடாம ஒப்பித்து கொண்டே இருந்தார்.

முந்தாநாளு வந்தேன் நைனா இங்க பெரியப்பா வீட்டாண்ட. இன்னாத்துக்கு வந்தேன் தெரியுமா?.. ஊடு கட்டுராங்கல்ல அதுநாண்ட கம்பி கட்டுறது, கலவை கலக்குறது வேலை பாக்குறேன் நைனா. அப்டியே அடிச்சு கிடாசி போட்ட மாறி வலிக்கும் உடெம்பெல்லாம். வலிக்கோ சொல்ல எதுனாதும் குடிச்சா தான கம்முனு இக்கு உடம்பு, அதால குடிச்சேன்.பொஞ்சாதி இருக்கல்ல அவ திட்டிகினே இருக்கா. அதா அடிச்சு போட்டுன்னு வந்திட்டேன் இங்க பெரியப்பா வீட்டாண்ட.

வெறும் வார்த்தைக்கு அப்டிங்களா அப்டின்னு மட்டும் கேட்காம, குடிக்கிறது அவுங்களுக்கு பிடிக்கல போல இருக்கு அதான் திட்டி இருப்பாங்க அப்டின்னு பளிச்சுன்னு சொன்னேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு. இன்னத்தா சொல்ற நீ, குடிச்சா தப்புன்னு என்னாண்ட சொல்றியா?.எவன் குடிக்கல சொல்லு?.இந்தா நிக்குறானுகளே இவனுங்க யாரும் குடிக்கலையா?.இன்னாத்த பேசுற நீ?.

கோபமா கேட்டவரு என்ன நினைச்சாருனு தெரியல, சத்தமா சிரிச்சாரு. மறுபடியும் பேச தொடங்கினாரு.

இன்னாத்துக்கு அதெல்லாம், first நீ இன்னா பண்ற?. படிச்சுகினு இருக்கியா?. இந்தா பஸ்காருனுங்க இன்னா பண்றானுங்க. ஒரு பஸ்ச கூட காணோம்..

பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே அவரது அழைப்பேசி ஒலிக்க தொடங்கியது, அவர் தள்ளாடிக்கொண்டே பார்த்துட்டு அழைப்பை ஏற்கவில்லை. மறுபடியும் ஒலித்தது துண்டித்தார். துண்டித்துவிட்டு மறுபடியும் என்னுடன் பேச ஆரம்பித்தார்.

பொஞ்சாதி தான் கால் பண்றா. இன்னாத்துக்கு கால் பண்றா?, குடிச்சு செத்துபோ ன்னு சொன்னா என்கிட்டே அப்போ, இப்போ இன்னாத்துக்கு கால் பண்றா?.. மறுபடியும் ஒலித்தது, இந்த முறை பதிலளித்தார். தெரியாமல் loud speaker on செய்து விட்டு பேச ஆரம்பித்தார்.

" இன்னாத்துக்கு சும்மா சும்மா தொல்ல கொடுக்ற, "ஏய்யா, இன்னா பண்றா ஊட்டாண்ட வாராம. மகேஷ் அழுதுக்கினே கிடக்கான், உன்னாண்ட இன்னாத்த சொன்னேன் குடிக்க வேணான்னு தானே, அப்பாலே ஊட்டாண்ட வந்து சேர்லனா கண்ணாலே ரெண்டு பேரையும் பாக்க மாட்ட, ஆமா சொல்லிபுட்டேன்."

"அய்ய வந்துக்கினு இக்குறேன், இன்னாத்துக்கு கத்திக்குனு இக்குற. இந்தா சைதாபேட்டை பஸ்க்கு தான் காத்துக்குனு இக்குறேன். "

அழைப்பை துண்டித்து விட்டு "நைனா, இம்மா நேரம் ஆகும் வரதுக்கு, வேறு எதனாவ்து பஸ் இருக்கா?."

"இருக்குங்க.இதோ இந்த பஸ்கூட போகும்". என்று கூறி முடித்ததும் கிளம்ப ஆரம்பித்த பேருந்திற்கு முன் போயி நின்றார் தடுமாறியபடி, பேருந்தும் நகர ஆரம்பித்தது, பேருந்தின் முன் நிற்கும் அவரை பிடித்து இழுப்பதற்கும், பேருந்து நகருவதர்க்கும் சரியாக இருந்தது. ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டேன். வியர்த்துவிட்டது. பேருந்தில் இருப்பவர்கள், ஓட்டுனர், நடத்துனர், அணைவரும் அவரை திட்டுவதுடன் நில்லாமல் அடிக்கவும் வந்து விட்டனர். சாகுறதா இருந்தா வேற பஸ்ல போயி விழு அப்டின்னு திட்டினார்கள்.

ஒருவழியாய் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பிவைத்துவிட்டேன். பேருந்து கிளம்பிவிட்டது.

இன்னா நைனா, மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?..இன்னாத்துக்கு பயந்துக்கினு, எவனும் ஒன்னியும் பண்ண முடியாது.பொஞ்சாதிக்கு தெரிஞ்சிது இவனுகள வெட்டிபுடுவா. இன்னா நினைசுக்கினு இருக்கானுக.?.

சண்டையிடும் வரை மட்டுமே கோபங்களும், தவறுகளும். எப்பொழுது சமாதானம் நிகழ முயற்சிக்கிறோமோ அப்பொழுதே காதல் வந்து ஒட்டிக்கொள்ளும் கெட்டியாய் நம்முள். காதலை போன்று அழகிய வார்த்தையும் இல்லை இவ்வுலகில் உள்ளங்களை இணைக்க. காதலை போன்ற அசுர வார்த்தையும் இல்லை இப்பூமியில் யுத்தங்கள் அரங்கேருவதற்க்கும். காதல் இருபுற கூர்மையான ஆயுதம், நடுவில் பிடிக்கத்தெரிந்தவன் ஜெயிக்கிறான் எப்பொழுதும். மணைவி என்பவள் அசைக்கமுடியாத, அசுரத்தனமான நம்பிக்கையாய் இருக்கிறாள் ஒவ்வொரு கணவனின் உள்ளும் என்பதை விதைத்துவிட்டார் என்னுள்.

அடுத்த பேருந்தில் அவரை அமர்த்திவிட்டு நகரும்போதும் அதே கேள்வியை கேட்டார் என்னிடம், "இன்னா நைனா, மெர்சலாயிட்டேன்னு நினிச்சியா?.

". அவரை பத்திரமாய் அனுப்பிவைத்துவிட்டு என்னுள் முனகிக்கொண்டேன்

" மெர்சலானது நீ இல்ல நைனா, நான் ..... :) ".

Tuesday, January 7, 2014

ஒன்றுமில்லை, உன் அன்பைத்தாண்டி..


இந்த உலகம் தினந்தோறும் ஏதாவது ஒன்றை நமக்கு கற்பிதம் செய்ய மறப்பதில்லை என்பதை உணர்கிறோம், எப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை உற்று நோக்குகிறோமோ அப்பொழுதெல்லாம்.

குழந்தையை குளிப்பாட்டியதும் இதமான சூரிய ஒளியில் காண்பிக்க வேண்டும் என்பது பழங்கால பழக்க வழக்கங்களில் ஒன்று. அதற்காக தினமும் நான் குடியிருக்கும் வீட்டின் முன்பு உள்ள வீதியில் சற்று நடப்பது வழக்கம் என் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும். அப்படி தான் இன்றும் நடந்தேன் அங்கும் இங்கும் வேடிக்கை காட்டிக்கொண்டு.

பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அவனுக்கு புதிதாய் தோன்றும். அவன் ரசிப்பதை அவன் சிரிப்பில் அறிவேன். அவன் வெறுப்பதை அவன் அழுகையில் அறிவேன். அவன் ஆர்வத்தை அவன் துள்ளி கீழ் இறங்க முயற்சிக்கும் அவனது செய்கையில் அறிவேன். இந்த தருணங்களில் நானும் உலகத்தை ரசிக்க கற்று கொண்டு இருக்கிறேன் என்பதே உண்மை.

வீதியின் ஓரம் இருக்கும் ஒற்றை மரத்தடியில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவனை பார்த்த மறு நிமிடமே அறிய முடியும் அவன் ஏழ்மையில் இருக்கிறான் என, ஏனென்றால் அவனது உடையும், சோகம் தேய்ந்த முகமும், வரண்ட தலையும், அழுக்கு படிந்த கால்களும், மாற்று சோடி செருப்புகளை அணிந்த அவனது பாதமும் உணர்த்தின அவனது நிலையை தெளிவாய்.

அதுமட்டும் அல்லாமல் ஒரு மூன்று சக்கர தள்ளுவண்டி அவன் அருகில். தள்ளுவண்டி சுமந்து கொண்டிருந்தவைகள் யாதெனில் பழைய பொருட்கள், பழைய பிளாஸ்டிக், பழைய பால் கவர், பழைய குளிர்பான பாட்டில்கள், பழைய மதுபாட்டில்கள். அவனது உருவம் என்னை ஈர்த்ததை விட எனது குழந்தையை அதிகமாய் ஈர்த்தது போல.

அவனது அருகே போகவேண்டும் என அடம்பிடித்தான் எனது மகன். ஏதாவது உதவி செய்யனும் என்ற எண்ணத்தின் தோரணையில் அவனருகே சென்றேன்.

"தம்பி பழைய பிளாஸ்டிக் எங்க வீட்ல இருக்கு வேணும்னா எடுத்துக்கொள்" என்றேன்.

"இல்லைங்க அண்ணா நாங்க வீதியில் கிடக்குறத மட்டும் தான் எடுப்போம், வீட்டுல இருக்குறத வாங்குறது இல்ல". என்றான்

 "ஏன் வாங்க மாட்ட வீட்ல இருக்குறத எல்லாம்?" என்றேன்.

 "வீட்ல இருக்குறத வாங்கின அதோட எடைக்கு தகுந்தமாதிரி காசு கொடுக்கணும், அதான் வீதில, தெருவோரத்துல கிடக்கறத மட்டும் எடுப்போம்."என்றான்.

"அப்படியா, எனக்கு காசு வேண்டாம் எடுத்துக்க" என்றேன்.

"வேண்டாம் அண்ணா" என்று திட்டவட்டமாய் மறுத்தான், அவனை கட்டாயப்படுத்த விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டு அவனை பற்றி தெரிந்து கொள்ள முனைந்தேன்.

"நீ படிக்கலையா தம்பி?" என்றேன். அவனது பதில் கொஞ்சம் இதயம் கணக்க வைத்தது.

"நாலாப்பு படிக்கிறப்போ அப்பா இறந்து போயிட்டாரு, ஐந்தாவது வரை படிச்சேன், அம்மா கஷ்டப்பட்டத பார்த்து அம்மாகிட்ட எனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னேன், அம்மா படிடா படிச்சு பெரிய ஆளாகுட அப்டின்னு சொன்னாங்க. மறுபடியும் பள்ளிக்கூடம் போனேன், ஆனா பழைய மாதிரி படிப்பு ஏறுல. போகமாட்டேன்னு அடம் பிடிச்சதும் அம்மா அடிச்சு பார்த்தாங்க. நான் போகல.

கடைசியில அம்மாகூடவே பழைய பொருள் பொறுக்க வந்துட்டேன்". சிறிது நேரம் மௌனம் காத்தேன். அடுத்த கேள்வி கேட்க மனது தடுமாறியது. பிறகு அவனே தொடர்ந்தேன்.

 "அம்மா, இப்போ மகாகவி தெரு இருக்குல அங்க போயி இருக்காங்க பழைய பொருள பொறுக்க, அதான் நான் இங்க உட்கார்ந்து இருக்கேன் அவுங்க வர வரைக்கும்.” என்றான்.

"அண்ணா, சரி, குழந்தை பையனா பொண்ணா?, பேரு இன்னா"?. உங்க குழந்தையா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான்.

"என் குழந்தை தான் தம்பி, பையன் பேரு "யாழின்". என்றேன்.

சிரித்துகொண்டே குழந்தைய இங்க கொடுக்கிறீங்களா என்றான்.

ஏதோ ஒரு தயக்கத்தில் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு கிளம்பிட தோன்றிய எண்ணத்தை தாண்டியும் மனிதம் என்னுள் குழந்தையை அவனிடம் கொடுக்க தூண்டியது.

குழந்தையை அவன் கையில் கொடுத்ததும் அவனது முகத்தில் அத்தணை சந்தோசம், சிரிப்பு, அவனுக்கு தெரிந்த எத்தனையோ செய்கைகளை காட்டி சிரிக்க வைத்தான் குழந்தையை.

தூரத்தில் அவன் அம்மாவின் குரல் ஒலித்தது, ஒலித்ததும் அவசரமாய் என்கைகளில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, அவனது கால்சட்டை பையில் கையை விட்டு ஒரு சாந்து பொட்டை எடுத்து குழந்தையின் நெற்றியில் வைக்க முயற்சித்தான். வேண்டாம் தம்பி, இதெல்லாம் இவனுக்கு வைச்சு பழக்க படுத்துள, அதானால வேண்டாம் என்றதும், சரிங்க அண்ணா நீங்க வைக்கிறப்ப வைங்க, இந்தாங்க வைச்சுக்கங்க என்று திணித்துவிட்டு ஓடினான் தள்ளுவண்டி அருகே.

இவற்றை எல்லாம் தூரத்தில் இருந்த கவனித்த எனது உறவுக்காரர் எனது அருகே வேகமாய் வந்து, என் கையிலிருந்த சாந்து போட்டு டப்பாவை பிடுங்கி எறிந்தார். கண்டதெல்லாம் பொறிக்கு கொண்டு வந்து கொடுக்குறாங்க அதை எல்லாம் வாங்கி வைச்சுகிட்டு என்றார்.

அவன் என்ன நினைப்பானோ, அவன் சென்று இருக்க வேண்டும் என்று திரும்பி பார்த்தேன்.

அத்தணை வலியோடு ஓடிவந்து சாந்து பொட்டு டப்பாவை எடுத்துகொண்டு அவன் உதிர்த்துவிட்டு போன வார்த்தை என் உறவுக்காரரை மட்டும் அல்ல என் மனதையும் நோறிக்கிவிட்டு போனது.

 "பொறுக்குகிற பொருளையெல்லாம் குழந்தைகிட்ட கொடுப்பேனுங்களா, இது என் தங்கச்சி பாப்பாவுக்காக வாங்கினது".

சொல்லி முடித்துவிட்டு அவன் தள்ளுவண்டியில் ஏறி மிதியடியை மிதிக்க ஆரம்பித்ததும்

"அழ ஆரம்பித்தான் எனது மகன் கைகளை நீட்டி சிறுவன் செல்லும் திசையை நோக்கி"..

தேம்பி தேம்பி அழத்தொடங்கினான், சிறுவனின் பிம்பம் எனது மகனின் பார்வையில் மறைய மறைய.



                           ஒன்றுமில்லை உன் அன்பைத்தாண்டி ...


Monday, January 6, 2014

ரகசிய குறிப்பேட்டிலிருந்து...


அழகிய நெடு நீள மரங்கள், நெடு நாட்களாய் பெய்த மழையில் சற்று தாழ்வான பள்ளத்தில் நிரம்பி கிடக்கும் கருப்பு நிற மழை நீர், மழைநீரோடு உறவாட எண்ணம் கொண்டு தேங்கிய மலை நீரில் குதித்துவிட்ட மரத்தில் நிலைத்திட தயங்கிய இலைகள், இத்தணைக்கும் மத்தியில் மரத்தில் செய்யப்பட்ட பழைய இருக்கை.

மெதுவாய் இருக்கையில் அமர முயற்சிக்கையில் அறிந்துகொண்டேன், மனிதன் மட்டும் காதல் எனும் உணர்வை அனுபவிப்பதில்லை மரங்களும், இலைகளும் தான் என. மன்னித்துவிட கூறிவிட்டு இருக்கையில் எனக்கு முன்பே உறவாடிக்கொண்டு இருக்கும் இலைகளை நகர்த்திவிட்டு அமர்ந்தேன். கடிகார முல்லை உற்று நோக்கினேன், நேரம் மாலை ஆறு மணி ஆகிவிட்டதை உணர்த்தியது. பாதையை உற்றுநோக்கி கொண்டிருந்தேன் ஏதோ யோசனையில்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அவளது உருவம் என் கண்களில் பதிந்தது தூரத்து பார்வையில். எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச தயாராகி கொண்டிருந்தேன். அவள் உருவம் எனது விளியருகே வருவதை உணர்ந்த்த தருணத்தில் சற்று நிமிர்ந்து அமர்ந்து இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.

அருகில் வந்தாள்,  அமைதியாய் அமர்ந்தாள் அருகில் தெளிவில்லா சிந்தனையுடன். "அப்புறம்" என்று ஆரம்பித்தாள் குனிந்த தலை நிமிராமல். "நீ தான் சொல்லணும்" என்ற வார்த்தையை நான் முடித்த நிமிடத்தில், "ஏன் உன்னிடம் ஏதும் இல்லையா சொல்வதற்கு" என்று நிமிர்ந்து நின்றாள் வார்த்தையிலும், நிஜத்திலும்.

முப்பது வருடம் பேசி கற்றுக்கொண்ட வார்த்தைகள் அப்பொழுது மறந்து ஊமையாகி நின்றன. வார்த்தைகள் ஊமைகள் ஆகிய தருணத்தில் பார்வையை மட்டுமே அவளது கேள்விக்கு பதிலாய் சமர்பித்தேன். "ம்ம் பதில் சொல்லு" என்றாள். "இல்லை" என்று கூறியதும் கன்னத்தில் அரைந்தாள் அழுதுகொண்டே.

முதல் முறை தொட்டாள் அரைதலின் வழியாக அந்த ஒருவருட புரிதல் பயணத்தில். "சரி இப்பொழுது என்ன செய்ய வேண்டும் உனக்காய்" என்றாள் கலங்கிய கண்களுடன். "நட்புடன் இருக்கலாம் என்ற சினிமா வசனங்களை நான் பேச தயாராக இல்லை உன்னிடம், காதல் என்ற புது வட்டமும் வேண்டாம், நட்பு என்ற பொய் வட்டமும் வரைந்துகொள்ள ஆசைப்படவில்லை நான், இனி நீ என்னுடன் பயணிக்க வேண்டாம் என் எழுத்தின் ரசிகையாய்" என்று முடித்ததும், வெடித்து அழுதுகொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் சில காகிதத்தை என் கைகளில் திணித்து விட்டு. பிரித்து படிக்கிறேன் ஒருவித நடுக்கத்துடன்.



8-oct-2009
9.14 pm
அன்புள்ள உனக்கு,

நான் ஒரு புத்தக பைத்தியம் தான் இல்லை என்று பொய்யாய் கூற விருப்பமில்லை, ஆனால் அந்த நிகழ்வு தான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தியது. வாழ்க்கையை சீர்படுத்தும் ஒப்பற்ற வழியை தேடி தேடி ஞானத்தை பெற்று கொள்ள ஏங்கிய பயணத்தில் தான் உன் எழுத்துகளை கண்டேன்.

இயல்பாய் பயணிக்கும் உன் எழுத்துக்களுடன் நானும் பயணித்தேன். எழுத்துகளை கொட்டிய உன்னிடம் ஏதாவது பேசி பேசி, எழுத்தை படைத்தவனக்கும் எனக்கும் தூரங்கள் இல்லை என்று அனைவரிடமும் கூறி பெருமை கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் உன் அத்தணை எழுத்துகளிலும் என் எண்ணங்கள் இருக்கும் பின்னூட்டமாய்.

உன் எழுத்துகளுக்கு கொட்டி இருக்கும் அனைத்து பின்னூட்டத்தை போலவே என் பின்னூட்டத்தையும் சராசரியாகவே எண்ணி, எனக்கும் மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு என்று முடித்து இருப்பாய். அப்பொழுதெல்லாம் அமர்ந்து யோசித்திருக்கிறேன் சராசரியாய் இருக்ககூடாதென்று. அதன் பிரதிபலிப்பாய், உன் கட்டுரைபற்றிய கருத்துகளுக்கு பதிலாய் " I need help, this is my mail id ******@gmail.com" என்ற பின்னூட்டத்தை அனுப்பிவிட்டு ஓராயிரம் முறை மின்னஞ்சலை பார்த்து கொண்டு இருந்தேன்.

 உனது மெயில் வந்த அந்த தருணத்தில் அத்தனை சந்தோசத்தில் என்னைப்பற்றி விவரத்தை எழுதி அனுப்பினேன், நீ சற்றும் யோசிக்காதவானாய் பதில் அனுப்பினாய் "என்ன உதவி வேண்டும்" என்று ஒற்றை வார்த்தையில். காரணங்களை தேடினேன், தேடினேன், உன் ஒற்றை பதில் என்னை சரியான காரணத்தை தேர்ந்தெடுக்க வைத்தது..

யோசனையின் முடிவில் அனுப்பினேன் உன் ஒற்றை கேள்விக்கு பதிலாய் " நான் இன்னும் 6 மாதத்தில் வேலை தேட போகிறேன், உங்களைபோன்று பொறியியல் தான் படிக்கிறேன், அதற்காக தான் எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தான் கேட்க விரும்புகிறேன் என்று" முடித்தேன்.

நீயும் ஏதோ சில புத்தகங்களை கூறிவிட்டு, படித்தால் போதும் என்று முடித்தாய் உரையாடாலை. இப்படி பல காரணங்களை உருவாக்கினேன் உரையாட. தேவையான அளவே பேசும் உன்னை போன்று இல்லை உன் எழுத்துக்கள், அவைகள் ஆயிரம் பேசின சமுதாய சிந்தணை, நட்பு, பாசம், காதல், தனிமை , மரணம் என அணைத்து வாழ்வியல்களையும்.

அன்று ஒருநாள் உன்னிடம் பேசியே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மெயில் அனுப்பினேன் நேர்முகத்தேர்விற்கு செல்வதாகவும், ஏதாவது உதவி தேவைபட்டால் உங்களை அழைக்க வேண்டும் என்றும், அழைபேசி எண் வேண்டும் என கேட்ட பொழுது மறுத்த நீ, சிறிது நேரத்தில் கொடுத்தாய்.

அன்று மதியம் நேர்முகத் தேர்வில் இருப்பதாய் கூறி உன்னிடம் பேசி விடவேண்டும் என்று முடிவு கொண்டவளாய் நிமிர்ந்தேன். அத்தணை நடுக்கம், உன் தெளிவான எழுத்துகளை போன்று உன் வார்த்தைகள் இருந்துவிட்டால் எப்படி பேசுவது என்று எண்ணிக்கொண்டே பல குறிப்புகளை எடுத்தேன்.

கடைசியில் உன்னை அழைத்தேன் ஒரு வித தைரியத்துடன்.

"ஹலோ" என்றாய்.

நானும் பதிலுக்கு "ஹலோ" என்றேன்.

"சொல்லுங்க என்ன விசயம்" என்றாய்?.

முதல் சுற்றில் வெற்றி பெற்றதாகவும், இரண்டாம் சுற்றி எப்படி அணுகுவது என்றேன் போலியாய், நீயும் ஏதோ பேசினாய் எண்ணை எப்படியாவது வெற்றி பெற செய்துவிட வேண்டும் என்று, அத்தணை முயற்சிகள் உன் பேச்சில். அணைத்தும் ரசித்தேன் ஏமாற்றுகிறோம் என்ற குற்ற உணவில்.


அப்படி தான் ஆரம்பித்தது உனக்கும் எனக்குமான நிகழ்வுகள். நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்று தான் பேசினாய் எப்பொழுதும் தெளிவாய், இயல்பாய், கண்ணியமாய்.

இந்த இயல்பான நிகழ்வுகளை தாண்டியும் உன்னோடு பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் போலியாய் உருவாக்கினேன். எழுத்துகளை தாண்டியும் உன்னோடு பயணிக்க தோன்றிய எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இந்த செயற்கையான நிகழ்வுகளை உருவாக்கும் நிகழ்வுகள் அரங்கேறின..

எழுத்து எண்ணம் செயல் நீ என ஆகும் தருணத்தில் உணர தொடங்கினேன் உன்னை என் அருகாமையில் இருக்க வைத்துகொள்ளும் முயற்சிகள் என்னுள் தொடங்குகிறது என. இருந்த நிலையிலும் அணைத்து மாற்றங்களையும் மாற்ற முயற்சித்தேன். இதே மாற்றங்கள் உன்னுள்ளும் நிகழும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அன்று உன்னை அழைத்தேன்..

உன்னை பிடித்து இருப்பதாய் முதன் முறையாய் அழைபேசியில் கூறினேன்.கூறிவிட்டு உன் பதிலுக்காய் காத்திருந்த அந்த வினாடியில் தடுமாறிய இதயம் தன்னுள் இயல்புக்கு மீறிய அளவில் வெடித்தது பலமுறை சில நொடிகளிலேயே...

வார்த்தை ஏதும் கூறாமல் துண்டித்தாய் அழைப்பை. இமைகள் விலக, கண்கள் அங்கும் இங்கும் சுழன்று கலங்க ஆரம்பித்தன.அழைபேசியில் உனது எண்ணை உற்றுபார்த்துகொண்டே செயலற்று போனேன், மூலையில் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டே எண்ணை செயலற்று ஆக்கின. தவறு செய்ததாய் உணர்ந்த தருணத்தில் இருண்டு போனது என் எண்ணங்களும்,என் நினைவும்..

மீண்டும் முயற்சித்தேன், அழைபேசி அணைத்துவைக்கபட்டு இருந்தது.பலமுறை முயற்சித்தேன். மூன்று நாட்களும் தனிமை என்னை தின்றது, தின்றதின் மிச்சத்தை நீ அனுப்பிய அந்த குறுந்தகவல் தின்றது. .


' உன்னிடம் இருந்து சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை, நீ தவறான பாதையில் பயணிப்பதாய் உணர்கிறேன், திரும்பி போகவேண்டும் என எதிர்பார்க்கிறேன், என்னுடைய தவறு இதில் இருப்பதாய் நீ உணர்ந்தால் அதற்காய் என்னை கேள்விகள் கேட்கலாம்.' என்று முடித்து இருந்தாய்..

கேள்விகள் கேட்க சொல்லி இருக்கிறாய் குறுந்தகவலில், நிச்சயம் வருகிறேன் நாளை மாலை ஆறு மணிக்கு, உண்மை பேசும் உன் விழிகளிடம் மட்டும் பேச வேண்டும் நான்.



இப்படிக்கு,
உன் நிழல் ரசிகை.


கண்கள் கலங்க படித்துவிட்டு வானம் உற்று நோக்கிக்கொண்டு என்னுள் கேட்க ஆரம்பிக்கிறேன் "காதல் என்றால் என்ன?".




Friday, January 3, 2014

நேசமிகு பேருந்து பயணத்தில்......


இன்றும் அவசர அவசரமாய் ஓடிப்பிடித்தேன் எனது வழக்கமான பேருந்து ஆகிய T151ஐ, படிக்கட்டில் காலை வைத்ததுதான் தெரியும் அதற்குள் நடத்துனரின் இயல்பான அறிவுரையான "மேல வா மேல வா" எனும் மந்திரம் காதை கிழித்தது.இடம் இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாது, அனால் நடத்துனருக்கு இருக்கும் ஒரே கவலை அல்லது அறிவுரை இது மட்டுமே என்று கூறலாம்,அத்தனை அழகாய் சலிக்காமல் கூறிக்கொண்டே சற்று கடிந்தும் கொள்வார்.

இடம் இல்லாமல் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கும் பெரியவர்கள், பள்ளிமாணவர்கள், வட மாநிலத்தவர்கள், முக்கியமாய் கணினிதுறையை சேர்ந்தவர்கள் தான் இவருக்கு அன்றைக்கு வாய்த்த அடிமைகள். சில்லறை சரியாக கொண்டு வர மாட்டார், அனால் வார்த்தைகளை மட்டும் அள்ளி வீசுவார் வேண்டாம் என்ற போதும்.

பாவம் இவருக்கு அரசுத்துறையில் பணியில் சேரும்போது பணப்பை கொடுத்ததோடு, பணப்பை நிறைய கோபத்தை நிரப்பி கொடுத்து இருப்பார்கள் போல. அதை மட்டுமே இல்லை என்று சொல்லாமல் கொட்டுவார். என்னுடன் குறைந்தது பத்து பயணிகள் செம்பாக்கம் நிறுத்தத்தில் ஏறியிருப்பார்கள்.

ஒவ்வொருவராக பணத்தை அனுப்பி வைத்தோம் பயனசீட்டிற்காய்.ஒவ்வொருவருக்கும் பயணச்சீட்டு சரியாய் வந்தது எப்பொழுதும் போலவே. எப்பொழுதும் போலவே ஒன்று இரண்டு ரூபாய் சில்லறைகள் வந்து சேரவில்லை.எப்பொழுதும் போலவே இன்றாவது கொடுத்து விடுவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தது மட்டுமே, சில்லறை கிடைக்கவில்லை எப்பொழுதும் போல்.

இதற்கிடையில் ஒருவருடைய இருபது ரூபாய் நோட்டு மட்டும் திரும்பி வந்தது முழுதாய் பயணச்சீட்டும் இல்லாமல். பணத்தை கொடுத்து அனுப்பிய வயதான பெண்மணி கேட்டார், ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள் பயணச்சீட்டு கொடுக்காமல் என்று, அதற்குள் நடத்துனரே கூட்டத்தை உடைத்து கொண்டு வந்தார் முன் கதவருகே.

எட்டுரூபாய் பயனச்சீட்டிற்கு இருபது ரூபாய் கொடுத்து இருக்க, சில்லறைக்கு எங்க போறது, சில்லறை கொடு இல்லையென்றால் இறங்கு கீழே என்றார். சில்லறை இல்லை என கூறிய அடுத்த நொடியில், கையை பிடித்து இறங்கு கீழே என்று தள்ளினார் நடத்துனர்.

சொன்னா நம்ப மாட்டீங்க, குறைந்தது ஏழு பேருக்கு மேல் ஒரே நிமிடத்தில் சில்லறை என்கிட்டே இருக்கு இந்தாங்க, இழுத்து தள்ளாதீங்க என சில்லறையை நீட்டினர். அத்தனை பேரும் நீங்கள் தினமும் திட்டித்தீர்க்கும் கணினித்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே.. ஒருவர் மேல வாங்கம்மா என கை பிடித்து தூக்கி விடுகிறார், மற்றொருவர் நடத்துனரிடம் விவாதிக்கிறார், மற்றொருவர் சில்லறை கொடுத்து கொண்டு இருக்கிறார், மற்றொருவர் 9884301013, 9445030516 அழைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்குறார்.

இவர்களை தவிர ஜடமாய் நின்றவர்களின் எண்ணிக்கை 50 இருக்கும், இவர்களில் சிலர் அரசாங்க அதிகாரிகள், தான் மட்டுமே இந்த உலகத்தில் வாழ படைக்கப்பட்டவர்கள் என எண்ணி சக மனிதனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத,இழிவுபடுத்தும் மேல் வகுப்பை (குறிப்பிட்டது ஜாதியை அல்ல,அந்தஸ்தை) சார்ந்தவர்கள், வேடிக்கை பார்ப்பது மட்டுமே தன் வேலை என நினைக்கும் பலசாலிகள், இப்படி எத்தனையோ பேர் அங்கே ....

பெண்மணி இறங்கும் இடம் வந்ததும், மெல்லிய குரலில் உதிர்த்து விட்டு போன வார்த்தைகள் அத்தனை பேரின் இதயத்தையும் நொறிக்கிவிட்டு போனது..

"சலவை சட்டை கலையாம போறானுக, இங்க்லிபீச பேசுறானுக, பொம்பளபிள்ளைககூட ரோடு ரோடா சுத்தராணுக,கட்டு கட்டா சம்பாதிக்கிராணுக அப்டின்னு ஏசி இருக்கேன்"..ஆனா நீங்க யாரும் மனுசன மதிக்க மறக்கலப்பா..வரேன் சாமிகள".....