Friday, July 23, 2010

நான் சந்தியா,


நான் சந்தியா,

உன்னை எனக்கு நன்றாய் தெரியும் நீ என் அத்தை மகன் என்பதால்,என் ஒவ்வொரு பள்ளி கோடை விடுமுறையும் - என் அம்மாவின் அம்மாவை காண ,என்னைச் சுமந்து வரும் - உன் வீட்டிற்கு,உன்வீட்டிற்கு வர கொஞ்சம் தயக்கம் தான்,

அப்படி தான் அந்த பத்தாம் வகுப்பு கோடை விடுமுறைக்கும், வெட்கத்தை வென்றுவிடும் ஆர்வத்தை, மறைக்க முடியாமல் வந்து விழுந்தேன் உன் வீட்டில் - காற்றில் ஊதிவிடப்பட்ட வேலிச்செடியின் பட்டுஇறகாய்.- நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு ,உன் வீட்டை நெருங்க நெருங்க எதோ ஒன்று மூச்சு விட சிரமப்படுத்தியது,அது சந்தோசமாய் இருக்கலாம், அளவுக்கு மிஞ்சிய வெட்கமாய் இருக்கலாம், நீண்ட நாட்களுக்கு பின் உன்னை காணும் ஆர்வமாய் இருக்கலாம்.எது என்று உணரும் முன் உன் வீட்டை அடைந்து விட்டேன்,

உன் அம்மாவிடம் பேசும்பொழுதே, என் கண்கள் நீ எங்கே? என்று கேட்டுக்கொண்டிருந்தது - அதற்கு தெரிந்த ஏதேதோ பாவனைகளில் பாவமாய், பாவம் உன் உன் அம்மாவிற்கு தான் புரியவில்லை,உடை மாற்றிக்கொண்டு வருவதாய் சொல்லி, உன் வீட்டின் அனைத்து அறைகளையும் தேடிவிட்டேன்,

என் கலங்கிய கண்கள் நீ காணவில்லை என்பதை உணர்த்தியது,உன்னை கண்டதும் எதுவும் பெரிதாய் பேசிவிடப்போவதில்லை என்பது என் உதட்டிற்கு தெரியும் தான் ,என் கண்களுக்கு தெரியவில்லை என்ன செய்ய...

எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி.....

நான் வருவது தெரியாது உனக்கு, எங்கே சென்று இருப்பாய் என்ற கேள்வி, உணவோடு சேர்ந்து என் உடலுக்குள் சென்றது,சிறிது நேரத்தில் உன் சத்தம் கேட்டது "அம்மா பசிக்குது, சீக்கிரம் சாப்பாடு போடு, திரும்பவும் விளையாட போகணும்",வார்த்தைகள் உணர்ந்த அடுத்த கணம், வெட்கம், சந்தோசம் , சொல்ல முடியா உணர்வுகள் ஒருபுறம் இருக்க, கைகள் தானாய் முகத்தை, தலைமுடியை சரி செய்தது, நீ சமையலறைக்குள் வந்த அந்த நிமிடம் என்னை அறியாமல் வெட்கம் என் முகத்தில் ஒட்டிக்கொண்டது,

என் பெண்மையை உணரவைத்தது, என் முகத்தில் ஒட்டி யிருந்த அத்தனை வெட்கமும்,
சமையறையில் வேகமாய் எடுத்துவைத்த உன் காலடி, வேகமாய் பின்னோக்கியது என்னைப் பார்த்ததும்,"அம்மா நான் அப்புறம் சாப்பிட்டுகொள்கிறேன் " என்ற சத்தம் மட்டும் தான் அங்கிருந்தது ,உன்னைத்தவிர. திட்டிகொண்டு இருந்தேன் , உன்னை காண முடியாமல் செய்த- என் வெட்கத்தை ,

உனக்காய் காத்துகொண்டு இருந்த என்னை, சிரிக்க வைத்தது உன் அம்மாவின் முனகல்
"என்ன ஆச்சு இவனக்கு இன்னைக்கு , சாப்பிடாம கூட விளையாட ஓடிட்டான் "

கண்கலங்க செய்ததது ,"சரி கிளம்புகிறோம்" என்ற என் அம்மாவின் விடை பெரும் வார்த்தை ."நாளைக்கு போகலாம்" என்று உன் அம்மா கூறிய வார்த்தையில் அமர்ந்து கொண்டு அடம்பிடித்தது என் இதயம்,

நீ வந்துவிட வேண்டும் என்று ஏங்கிய மனதை புரிந்தவன் போல வந்து நின்றாய் , நாங்கள் நகரப்போகிற அந்த நொடியில் ,இந்தமுறை முகத்தோடு ஒட்டி இருந்த வெட்கத்தை பிய்த்து, மனதுக்குள் புதைத்துகொண்டு உன்னை பார்த்தேன்,

உன் வெட்கத்தை மறைக்க உன் அம்மாவின் கழுத்தை இருக்கமாய் உன் அம்மாவின் பின்புறம் இருந்து பிடித்துகொண்டு ,உன் உதட்டை மெல்லியதாய் விரித்து, உன் பற்களை வெட்கத்தில் காட்டினாய், உன் கண்ணும் என் கண்ணும் தெரியாமல் மோதிக்கொண்ட அந்த சில நிமிடத்தில் உன்னிடம் பேச நினைத்த அனைத்தையும் பேசியதாய் தோன்றியது,

விடைபெற்ற அந்த வினாடியில் தான் தெரியும் , பேசியும் - தீராத வார்த்தைகள் என்னுள் இருக்கிறது என்று,நான் நகரும்பொழுது நீ கையசைத்து வழி அனுப்பி வைத்தது எதோ வலியை என்னுள் திணித்தது .

பேருந்தின் வேகம் என் கலங்கிய கண்ணீரினை காற்றுடன் கலக்க செய்தது ,

எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்து இருக்கிறேன், இதற்கு முன் என்றாவது உன் வெட்கத்தை காட்டி ,இப்படி அழ செய்ததுண்டா?.என்ற கேள்வியோடு என் வீட்டை அடைந்தேன்.

காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....

                                                                                         
                                             

Wednesday, July 14, 2010

தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...



என் அரைகுறை தூக்கத்தில் கனவு வருவதில்லை,
கால்கள் உடைந்து, கோனல்மானலாய் நடப்பதாய் நான் காண்பதில்லை கனவுகளை,
விதவிதமான காலணிகளைத்தான் காண்கிறேன் என் ஒவ்வொரு வேலை பட்டினியிலும்,
காலணிக்குச்சொந்தமான முகங்களைக்காணமுடிவதில்லை எப்போதும்,முகம் காட்ட மறுத்து, முந்திச்செல்லும் உங்களிடம் எப்படிச்சொல்லுவது, நான் ஊனமாக்கப்பட்டு இருக்கிறேன் என்று.

உரக்க கத்திக்கொண்டு இருக்கும் சென்னைக்கு உங்களைப்போல் நானும் வந்தவன் தான்,
என்னை முடமாக்கிய நேரத்தில் நீங்கள் தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆயுதத்தால்,

அனாதையான எனக்கு பணம் கொடுத்துச்சென்னை அனுப்பிய தோழனுக்கு, விலாசம் கொடுக்க,எனக்கான முகவரியை சென்னையின் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறேன் , தி.நகர் கோவில் வாசல் தான் என் நிரந்தர முகவரி என்று தெரியாமல்,

என்னை யாரும் உற்று நோக்கவில்லை, அந்த இரக்கமற்றவர்களைத்தவிர,
நான் சிந்திய வேர்வையில் அறிந்து இருக்கிறார்கள், நான் அனாதையென்று,

அனாதைக்குச்சொந்தமான பட்டினியையும், வாழ்க்கைத்தேடலையும்
இரக்கமற்ற அவர்கள் கவனித்து இருக்கிறார்கள்,இரக்கமுள்ள நீங்கள் கவனிக்கத்தவறியதை.

கவனிப்பதை நிறுத்திவிட்டு, வீழ்த்தினார்கள் எளிதாய், உதவி செய்கிறேன் என்ற ஆயுதத்தால்,

காதுகள் செவிடாகின, கத்திய சத்தத்தில்,கருணையற்ற மிருகங்களாய் எங்களை காயப்படுத்தினர்,ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் வழங்கப்பட்டன காயங்கள், எனக்கான தருணத்தில் கால்களும், கழுத்தும்...

கண்ணீர் துளித்தது, எனக்கான நிரந்தர முகவரியை நிர்ணயத்துவிட்டார்கள் தி.நகர் கோவில் வாசல் என, கால்களைப்பரப்பி, கழுத்தை மண்ணில் புதைத்து,சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று வெற்று உடம்பில் உங்கள் காலணிகளை பார்த்து பிச்சை கேட்கவேண்டும்,எனக்கான வேலையும் கொடுக்கப்பட்டுவிட்டது, நீங்கள் கொடுக்க தவறியதை, செய்தே முடித்து விட்டார்கள் கருணையற்றவர்கள்.

என் இதழ்கள் சொல்லத்துடித்தது, கேட்க தயாராக இல்லாத உங்களிடம், எதையோ நோக்கிய உங்கள் அவசர பயணத்தில் என் இதழ் நிரப்பிய சத்தத்தின் சாவு வாசனையை நுகர மறந்துவிட்டீர்கள்.கேட்க நேரமில்லாத, கேட்க தயாராக இல்லாத உங்கள் செவிகளை தொடும்முன் என் சத்தமும் மறித்து போகிறது.

என்னைத்தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னைக்கடந்து போகக்கூடும்,
ஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் எனக்கு நாணயத்தை போட்டு சென்று இருப்பான்.

உங்களின் ஒவ்வொரு ரூபாய் கருணையும், இரக்கமற்றவனின் காலடியில் மௌனமாய் எண்ணப்படுகின்றன,என் வயிரும் அளவிடப்பட்டே, தப்பித்து செல்லாதவாறு நிரப்பபடுகிறது கருனையற்றவர்களால் ,

உங்கள் செவிகளும், உங்கள் மனங்களும் எங்களுக்காய் திறக்கபடதாவரை எங்களின் நிரந்தர முகவரி -கோவில் வாசல், நெரிசல் நிறைந்த சாலை, பேருந்து நிறுத்தம் என்று கருனையற்றவர்களால் தீர்மானிக்கப்படும்...

சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று கிடக்கும் என் தேகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிச்சை எடுக்கிறேன் எனும் அவமானம் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துகொல்கிறது.முழுவதுமாய் அரித்துகொல்லும் முன் தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...


இப்படிக்கு
ஒவ்வொரு நாணயத்திலும் தன் உயிர்நண்பனை தேடுபவன் .


                                                                                         
                                             

Friday, July 9, 2010

விரல் பிடித்து வலைதளத்தில் கால் ஊன்றி நடக்க செய்த தேவா அண்ணாவுக்கு தம்பிகளின் வாழ்த்துக்கள்




தேவா அண்ணா..................

இவர் தான் எழுத்து எனும் என் கரம் பிடித்து , பதிவுலகம் என்னும் இன்னொரு கிரகத்தை காட்டியவர் , என்னைப்போல இன்னும் பல தம்பிகளுக்கு கரம் கொடுத்து கற்றுக்கொடுத்தவர். முகம் தெரியா எங்களை ,விலைமதிக்க முடியா வாசகர்களாகிய உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர், உங்களிடம் எங்களை கொண்டு வந்து சேர்த்தியவர்.

நேர்மையின் ஒப்பற்ற பிரதிபலிப்பாய், நம் படைப்பு சரியாக இருக்கிறது என்றால் , முதல் ஆளாய் நின்று நன்று என்று சொல்லி பாராட்டுவதும், தவறாக இருந்தால் திருத்த முயலச் சொல்லி அருகில் நிற்பதும் தேவா அண்ணாவின் கடமையாய் இருக்கும் எப்பொழுதும்..

இரண்டு வரி கவிதைகளை எழுதினோமா , போனோமா என்று இருந்தவன் நான், எழுத்து என்பது காதலைச் சொல்ல மட்டும் தான் என்று புரியாமல் கிடந்தவன் நான், எழுத்து என்பது எங்கு இருந்தோ, ஏதோ ஒரு மூலையில் இருந்து படிப்பவனையும் சுட்டெரிக்க வேண்டும்,உள்ளுக்குள் தீப்பிடித்து எரியச் செய்ய வேண்டும் , எழுத்துகளின் உச்சரிப்பில் தன்னை மறந்து கிடைக்க வேண்டும் வாசகன் என்றும்,

சாதிகளையும், தீண்டமையயும் அடித்து நொறுக்க நம் எழுத்து ஒரு பாலமாய் இருக்க வேண்டும்,படித்து முடித்துவிட்டு சென்ற பிறகும் அசைக்கமுடியா ஆணியை நடப்பட்டு இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர்..

20 வரிகளில் சொல்வதை நான்கே வார்த்தைகளில் நடப்பட்டு இருக்கவேண்டும், ஸ்டாலின், லெனின் ,போன்றோர்கள் மக்களை சென்றடைய அவர்கள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள் எழுத்தும் , பேச்சும் தான், அத்தகைய பெருமையுடைய எழுத்துக்கள் மிகவும் கூர்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் பூவை விட மென்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் அன்பையும், காதலையும் சொல்ல முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் அசுத்தமற்றதாய், மேன்மையானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஒழுக்கத்தையும், கருத்துக்களையும் , நம் தேசத்து மக்களுக்கு புகட்ட முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம்,

அதே எழுத்துக்கள் புரிந்துகொள்ள இலகுவானதாய் இருக்க வேண்டும் எப்பொழுதெல்லாம் ஆன்மா, தேடல், உயிர், கடவுள், இறப்பு, பிறப்பு இவைகளை பற்றி விளக்க முயற்சிக்குறோமோ அப்பொழுதெல்லாம் ,

இங்கே வலைத்தளத்தில் எழுதி போட்டுவிட்டு செல்லும் ஒவ்வொரு வார்த்தையும், வாசகனின் மனதில் பதிந்து இருக்க வேண்டும், முளைத்தும் இருக்க வேண்டும், வாசகனோட நின்றுவிடாத வரிகளாக இருக்கு வேண்டும், அவன் மனதில் விதைத்த வரிகள் முளைத்து வெளிவர வேண்டும், அதன் மனமும், கிளைகளும் ஒவ்வொரு அடிப்படை கல்வியரிவாளன், கல்வியரிவற்றவனையும் தொட வேண்டும், உண்மையை போதிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் , சமூக கொடுமைக்கு எதிராய் தீபந்தந்தை சுற்றி எரிய வேண்டும் ,
அன்பை மலரச் செய்ய வேண்டும், பகுத்தறிவை புகட்ட வேண்டும், உலக நடப்புகளை அறியச்செய்ய வேண்டும்,

இப்படி தான் எழுத வேண்டும் என்று பதிவுலகில் கால் ஊன்றி நடை பயில கற்றுக்கொடுத்தவரக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் மற்றும் என்னை போல் கால் ஊன்றி நடை பயில தேவா அண்ணாவிடம் கற்றுக்கொண்ட தம்பிகளின் சார்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவாக கீழே காணும் விருதை அவருக்கு அளிக்க உள்ளோம்..








நிச்சயம் அவரது எழுத்துக்கள் உங்களுக்குள் காதலையோ, விழிப்புணர்வையோ, புரிதலையோ , தாக்கத்தையோ ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை...





அண்ணனின் எழுத்தை பார்த்து பிரமித்து நிற்கும் தம்பிகள்

சௌந்தர் (ரசிகன் )
ஜீவன் பென்னி (பதிவுகள் )
வில்சன் (தமிழ் தலைமகன் )
சிவராஜன் ராஜகோபால் (கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்..! )
வீரமணி (மனித மனங்களின் ஒரு அராய்ச்சி.. )
செல்வா (கோமாளி )
ஜெயந்த் (வெறும்பய)
ரமேஷ் (சிரிப்பு போலீஸ் )
யோகேஷ் (ஜில்தண்ணி)
விஜய் (விஜய் கவிதைகள்)


                                                                                         
                                             

Thursday, July 8, 2010

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? -- வங்கியின் வாசலில் பிச்சைக்காரனாய்...(பாகம் - 5 )



நன்றிங்க ஐந்தாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு...


முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லைங்க, 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , எழும்பொழுதே துக்கம் என் கன்னத்தோடு ஒட்டியிருந்தது, வாழ வந்தாச்சு வாழ்ந்து தான் ஆகணும், சிங்கம் இருக்கும் கூண்டில் தள்ளப்பட்டத்துக்கு அப்புறம் எதுக்கு சிந்தனை, பலம் இருக்கும் வரை மோதி உயிரை காப்பாத்த வேண்டியது தானே. அதை தான் நானும் பண்ணினேன், யாரும் வருவதிற்கு முன்னமே என் "கால்கள்" அந்த அலுவலகத்தை சுற்றி நடந்துகொண்டிருந்தது, "கண்கள்" யாராவது வருகிறார்களா என்று பாதையை நோக்கிக்கொண்டிருந்தது , "மூளை",பணம் கிடைக்குமா என கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது , "மனது" அப்பா,அம்மா வருந்திக்கொண்டு இருப்பார்களோ என ஏங்கிக்கொண்டிருந்தது,

நேரம் மாற மாற ஏமாந்தவர்களின் கூட்டம் அதிகமாகியது, நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரை பார்க்க முடிந்தது, கூடி நின்ற கூட்டங்களின் கோபத்தைப்பார்த்ததும், பணம் தருவதாய் ஒப்புக்கொண்டார், ஆனால் நாங்கள் விடுவதாய் இல்லை, "எப்போது" என்ற கேள்வியையும், "எப்படி" நம்புவது என்ற கேள்வியையும் முன்வைத்த பிறகு , நிறுவனத்தின் உருவம் பதித்த தாளில் எப்பொழுது தருகிறேன், என்ற விவரத்துடன் கையொப்பமிட்டு கொடுத்தார்..

ஏதோ பணம் வந்த திருப்தி எங்களுக்கு வந்திருந்தது, வாங்கிக்கொண்டு கிடைச்சுருமா?, ஓடாம இருப்பானா என 1000 கேள்விகள் நெஞ்சை சுட்டுக்கொண்டேயிருந்தன, அந்த தாள் அவ்வப்பொழுது மருந்து போட்டுக்கொண்டே இருந்தது சுடப்பட்ட என் நெஞ்சிற்கு.


வாரங்கள் கடந்து மாதம் ஆகின, பணத்தைத்திருப்பி தருவதாய் சொல்லியிருந்த தேதியும் வந்தது, எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாது , ஆனால் நான் 5 மணிக்கெல்லாம் நிறுவனத்தின் வாசலில் இருந்தேன், மணி 9 ஐ நெருங்கியதும் நிறுவனத்தின் காவலாளி வந்திருந்தார், மன்னித்துக்கொள் என்று அவர் ஆரம்பித்ததும் கண்கலங்க ஆரம்பித்தது, அதற்குள் அவர், இன்னைக்கு பணம் கொடுப்பதாய் அறிவிக்கப்பட்ட எல்லோரையும் நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்,

இல்லை என்று சொல்வதற்கு பதிலாக நாளை வா என்று கூறியது கொஞ்சம்,உயிரை மிச்சம் வைக்காமல் கொன்றதிற்கு பதில் வெறும் காயங்களுடன் வெட்டிச்சென்றது போலிருந்தது ..

வேலைத்தேடும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை நமக்கு தேவையா என்று மனசு சொல்லிக்கொண்டேயிருக்கும் ..எப்படியோ விடிந்தது , சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அந்த நாளில் 100 பேருக்கு மட்டும் கொடுப்பதாய் அறிவித்திருந்தார்கள், சிறிது நேரத்தில் நிறுவன உரிமையாளர் வந்தார், சிறிய உருவம், சரியாக சாப்பிடவில்லை, இப்படி நான் இருந்தாலும் , என் பெற்றோர்கள் கஷ்டப்பட்ட பணம் பரிபோகக்கூடாது என்று கூட்டத்தில் முண்டியடித்து 4 ஆம் இடத்தைப்பிடித்தேன், ஒவ்வொருவராய் அறைக்குள் அழைக்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது, அதை நான் வாங்கிய நிமிடத்தில், கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன்...

அப்பொழுது யாரென்றே தெரியாத ஒரு நண்பர் என்னை அழைத்து சீக்கிரம் வங்கிக்கணக்கு ஆரம்பித்து காசோலையை உன் கணக்கில் போட்டுவிடு, ஒரு வேலை நிறுவனத்தின் கணக்கில் பணம் குறைவாகக்கூட இருக்கலாம் என்றார்...

சொல்லி முடிப்பதற்குள் வேகமாகிவிட்டேன், நான் தங்கியிருந்த அறைக்கு கூட செல்லவில்லை, ஒவ்வொரு வங்கியின் படியை மிதித்த அடுத்த சில நிமிடங்களில் ,சுவற்றில் எறியப்பட்ட பந்தினை போல் எறியப்பட்டு இருப்பேன்,நிரந்திர இருப்பிட முகவரி சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் துப்பி எறியப்பட்டேன், அனைத்து வங்கிகளிலும் சொல்லி வைத்தாற்போல். ஒரே ஒரு வங்கியில் மட்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பிரபலமான ஒருவர் கையொப்பமிட்ட இருப்பிட சான்றிதல் இருந்தால் வங்கிக்கணக்கை துவக்கி தருகிறோம் என்றார்,

யாரைத்தேடுவது , யாரைப்பிடிப்பது என்று தெரியாமல் வங்கியின் வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தது இன்னும் இதயத்தைக்கலங்கச்செய்யும்.நண்பனிடம் பென்சில் வாங்கவே பல நூறு முறை யோசித்து விட்டு, கடைசியில் கடன் வாங்க பிடிக்காமல் ஆசிரியரிடமே அடி வாங்கிக்கொள்வது மேல் என்று செல்பவன் நான், இப்பொழுது யாரை, எங்கே கேட்பது எனக்கு உதவி செய் என்று, முதல் முறையாய் மனசாட்சி சொல்வதை கேட்க மறுத்துவிட்டு வங்கிக்கு வரும் சிலபேரிடம் கெஞ்சிப்பார்த்தேன், விவரத்தை கூறியும் பார்த்தேன், ஒருவரும் உதவ முன்வரவில்லை, உண்ண வேண்டும் என்ற ஒன்றே எனக்கு மறந்து போயிருந்தது.

மாலையில் எனது அறைக்குத்திரும்பினேன், கோவிந்தராஜ் என்ற ஒரு அண்ணன் அங்கே தங்கியிருந்தார், நிலைமையறிந்த அவர் எனக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்று என்னை அழைத்துச்சென்று , நான் அவரிடம் ஓட்டுனராக வேலை செய்கிறேன் என்றும், இந்த விலாசத்தில் தான் தங்கியுள்ளான் என்றும் ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தார்,

எப்படியோ கணக்கை ஆரம்பித்து காசோலையையும் கணக்கில் போட்டுவிட்டேன், இன்னும் 5 நாள் கழித்து வாருங்கள் என்று சொன்னார்கள். இந்த 5 நாளும் காலையில் 2 தேனீர் , மதியம் 3 தேனீர் , இரவு 2 பரோட்டா என்று நகர்ந்தது... உறங்கும் பொழுது ரம்பா, சிம்ரன்லாம் கனவுல வரவேண்டிய வயசுங்க, ஆனா வேலை கிடைக்குற மாதிரியும், நேர்முகத்தேர்வில் தோற்கிற மாதிரியும், ஜெயிக்கிற மாதிரியும் காண்கிற கனவுல , இந்த ஐந்து நாட்களில் பணம் கிடைக்குற மாதிரியும், கிடைக்காத மாதிரியும் சேர்ந்துகிடுசுங்க .இரவுளையும் என்னைச்சுத்தி அவ்வளவு வெளிச்சமுங்க, கண்ணை இருக்கிமூடித்தூங்கினா கூட தோல்வியும், ஏமாற்றமும் துருத்துசுங்க கனவா வந்து.

அவர்கள் சொன்ன அந்த நாளில் முதல் ஆளாய் வங்கியின் வாசலில் நின்றேன், வங்கியும் திறக்கப்பட்டது, ஓடி விசாரித்தேன், உங்கள் கணக்கில் 10,000 வந்துவிட்டது என்றார்கள்... நிச்சயமாய் அந்த கணம் உணர்ந்த சந்தோசம் , நான் கல்லூரியில் 96% எடுத்து முதல் மாணவனாய், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து, மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்து, செய்தித்தாளில் எனது பெயரை அப்பா எனது தெருவில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது இருந்ததை விட மிகப்பெரிய சந்தோசமாய் இருந்தது..

இதைப்படிக்கிற எத்தனைப்பேரால் இந்த வழிய புரிஞ்சுக்க முடியும்னு தெரியல, என்னை மாதிரி லட்சக்கணக்கில் இந்த சென்னையை தினமும் சுத்திசுத்தி வராங்க.உயிரை பணயம் வைத்து பனை மரத்தில்ஏரி, பதநீர்இறக்கி சம்பாதித்த பணம், காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை வெய்யலில் கலைவெட்டி அம்மா சம்பாதித்த பணம் என்னை விட்டுப்போகுல, என் கையில் தான் இருக்கு, பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் என் சொந்த மண்ணுக்கு,

ஏமாறவில்லை நான் அப்டிங்கற ஒரு சின்ன திமிரோட என் சொந்தமண்ணில கால் எடுத்துவைச்சேன், வீட்டுக்குப்போனதும் முதல் வேலையா பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்ததும் கொஞ்சம் கண் கலங்கிட்டேன், என் அம்மா பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொன்னங்க " பையன் இந்த காச வாங்கிறதுக்காக சாப்பிடமா கூட இருந்து இருக்கான் போல, காசு போனா கூட பரவாயில்லை, இப்படிப்பாவமாய் வந்து இருக்கானேன்னு" அழுதாங்க..

அடப்போங்க, அப்பா, அம்மா பாசத்த அடிச்சுக்க இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுபோய்டுச்சுங்க அந்த நேரத்துல.அன்று இரவே சென்னைத்திரும்ப முடிவு செய்துவிட்டேன், இரவு ஆனதும் பையைத்தூக்கிக்கொண்டு கிளம்பும்பொழுது ,அம்மா அழுதுகொண்டே இன்னும் ஒரு 2 வாரம் இருந்து நல்லா சாப்பிடுட்டு அப்புறம் போயி தேடுடா என்று சொன்னாங்க, அப்பாவும் பக்கத்துல நின்னுகிட்டு மெதுவா போலாம் ஒன்னும் அவசரம் இல்லைன்னு சொன்னாங்க,

ஆனா நான் இப்படி ஒரு வார்த்தை சொல்வேன், அவுங்கள அழ வைப்பேன்னு அவுங்க கனவுல கூட நினைச்சு இருக்க மாட்டங்க, அப்படி என்ன சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன்?..

ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்

                                                                                         
                                             

Thursday, July 1, 2010

கணவன் (என்கிற) காதல்



உன்னை மணந்த நாள் முதல் இன்று வரை உன்னை நேசிக்கிறேன்

நாம் இருவரும் ஒன்றாய் நின்று கொண்டு இருப்போம்,நமக்கு முன்னே இருக்கும் ஒரு இலக்கை காட்டி,
அதை தொடுபவர் வெற்றியாளர் என்பாய், நான் 1,2 3 சொல்லியவுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பாய் ..
3 சொல்லி முடித்து இருப்பாய்... சிறுது நேரம் கழித்து இருவரும் சிரித்துகொண்டு இருப்போம் சிறிதும் நகராமல்,
நீ முதலில் அல்லது நான் முதலில் வருவோம் என்று நினைத்து ஏமார்ந்து போன இலக்கை பார்த்து ....

என்னுடன் மோதிப்பார் என்று என் கைபிடித்து நாற்காலியில் வைத்து சாய்த்து பார் என்பாய், ஆரம்பிப்பதற்கு முன் சொல்வாய் இருமுறை மோத வேண்டும் என்று, ஆளுக்கொரு முறை வெற்றிபெற்றுவிட்டு சிரித்துகொண்டே செல்வோம், இன்னும் அந்த நாற்காலி எத்தனை முறை தான் ஏமாறும், யாரவது ஒருவர் ஒருநாள் வெற்றிபெறுவார்கள் என்று...

சமைக்கும் பொழுது விரல்களை சுட்டுக்கொண்டு சத்தம்போடுவாய்,பதறிக்கொண்டு ஓடிவந்து, கலங்கிய கண்களுடன் மருந்து தடவி முடிக்கும் பொழுது, அழ ஆரம்பிப்பாய்,
நிமிர்ந்து பார்க்கும் என்னிடம் ஒன்றுமில்லை என்பாய், உன்னை சுட்டுவிட்ட பாத்திரம் கூட நிச்சயம் மன்னிப்பு கேட்டு இருக்கும்...

அதிகாலையில் நீ என் நெற்றிபொட்டில் சத்தமில்லாமல் உன் முத்தங்களை விட்டு செல்லும் பொழுது முணு முணுக்கிறாய்,நன்றி கடவுளே என்று, நான் கடவுளை நம்பாதவன், நான் யாருக்கு நன்றி சொல்வது என்று தவித்த தருணங்கள் உண்டு.நீ கொடுத்த முத்தங்களை பத்திரமாய் வைத்து இருந்து, நீ உறங்கிய பின்பு உனக்கு திருப்பிதந்து இருக்கிறேன்.

நீ ஊருக்கு சென்ற நாட்களில் உன் பிரிதலின் வழியால் கண்கலங்கி இருக்கிறேன், ஏன் அழுதும் இருக்கிறேன், உண்மையை சொல்ல வெட்கம் ஒன்றும் இல்லை எனக்கு.ஊரிலிருந்து தொலைபேசியில் நீ என்னிடம் கேட்கும் பொழுதெல்லாம், நான் நன்றாக இருக்கிறேன் என்று என் உதடுகள் பொய்யை உதிர்க்கும், நீ திரும்பி வந்து நிற்கும் பொழுது ,என் கண்கள்- உதடுகள் கூறிய பொய்யை உடைக்கும்.



அன்றும் அப்படி தான் உன்னை மருத்தவமனை அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு, கலங்கிய கண்களோடு காத்திருந்தேன்.நீண்ட நேரங்களுக்கு பிறகு வந்த மருத்துவர், நம் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு, மன்னிக்கவும் என்றார்கள், சந்தோஷத்தில் சிரிக்க ஆரம்பித்த என் உதடுகள், கண்கள் கேள்வியுடன் மருத்துவரை பார்த்தன, கால்கள் முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்து உன் அறையில் நின்றது.

உறங்கியது போன்ற உன் முகம், சொல்லவந்து ஏமாந்ததின் தோற்றமாய் உன் கண்கள் மூடி இருந்தன.புரிந்ததடி புரிந்ததடி உனக்கு இனி வலிக்காது என்று தெரிந்த போதும் உன்னை அடித்தேன், என்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும் நீ மட்டும் வேண்டும் , நீ மட்டும் வேண்டும் என்று கதறிநேனடி,என் அருகிலே இருந்தாய் பேசமுடியவில்லையடி,

கணவாய் இருக்ககூடாதா என்று மனம் ஏங்கியதடி, நீ என்னை அழ விடாமல் பாதுகாத்து வைத்து இருந்த கண்ணீரெல்லாம்,இப்பொழுது கரைந்து கொட்டுதடி,விழித்து என் கண்ணீரை துடைக்கமாட்டாய என்று ஏங்குதடி , உன்னோடே இறக்கவிடாமல் எனக்காக ஒரு இளம் உயிரை தந்து விட்டாய்.எப்படி உன்னோடு இறப்பேனடி....



இன்றோடு 20 வருடங்கள் ஆகுதடி, நான் உன்னை எனக்குள் புதைத்து, இன்னும் நீ மட்டுமே மனம் வீசிக்கொண்டு இருகிறாய், இப்பொழுது நானும், நம் மகளும் தானடி இங்கு வந்து இருக்கிறோம், அவள் பிறந்தநாளை சமர்பிக்க...

பிறந்த நாள் வாழ்துக்கள் "சுருதி ", நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் , நான் உன்னை காதலிக்கிறேன் "சுருதி ",நீ என்னை காதலிக்கிறாயா என்று சொல் ,

இல்லை அருண், நான் உன்னை காதலிக்கவில்லை , .....

உனக்கு என் காதலின் அர்த்தம் புரியவில்லை சுருதி,அதான் என்னை வெறுக்கிறாய்...

காதலின் அர்த்தம் புரிய வேண்டுமா அருண் , பார் அங்கே,அவர் தான் காதலின் அர்த்தம், இறந்த பின்பும் மனைவியின் காதலை இன்னும் நினைவிலும், கல்லறையிலும் தேடுகிறார்.என்னில் அழகை தேடிய உன்னிடம் எப்படி காதலை தேடுவது ? ...



திரும்பி பார்க்கிறேன் என் மகள் யாரோ ஒரு பையனிடம் என்னை நோக்கி கையை நீட்டிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறாள் ....